திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு 6
குர்ஆனை முடிக்கும் துஆ
தற்காலத்தில் குர்ஆனை முடிக்கின்ற பிரார்த்தனை என்று ஒரு நீண்ட பிரார்த்தனையையும் குர்ஆனின் இறுதியில் எழுதி
வைத்திருக்கிறார்கள். நாளடைவில் இது குர்ஆனோடு கலந்து விடக் கூடிய அபாயம் இருக்கிறது.
இந்தப் பிரார்த்தனையில் ஆழமான கருத்துக்களோ, அல்லது நபிகள் நாயகத்தின் வழி காட்டுதல் களோ ஏதுமில்லை. இந்தப் பிரார்த்தனையை ஓத வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.
மேலும் இதன் பொருளை அறிந்து கொண்டால் இப்பிரார்த்தனை குர்ஆனுடன் விளையாடும் வகையில் அமைந்துள்ளதை யாரும் அறியலாம்.
உதாரணமாக "கதவு'' என்ற சொல்லை நாம் கூறுகிறோம். கதவு என்பதில் "க' வைக் கூறியதற்காக கஞ்சியையும், "த'’வைக் கூறியதற் காக தண்ணீரையும், "உ' வைக் கூறியதற்காக உணவையும் "தா' என்று கூறினால் அது எத்தகைய தரத்தில் அமையுமோ அது போன்ற தரத்தில் தான் இந்தப் பிரார்த்தனையைக் கற்பனையாக உருவாக்கியுள்ளனர்.
"ஜீம்'' என்ற எழுத்தை ஓதியதால் ஜமால் (அழகை) தா! "ஹா' என்ற எழுத்தை ஓதியதால் "ஹிக்மத்' (அறிவு) தா! என்று ஒவ்வொரு எழுத்தையும் குறிப்பிட்டு அந்த எழுத்தில் துவங்கும் வேறொரு வார்த் தையின் பொருளை அல்லாஹ்விடம் கேட்கும் வகையில் அந்தப் பிரார்த்தனை அமைந்துள்ளது.
ஜீம் என்ற எழுத்து ஜமால் என்பதற்கு மட்டும் முதல் எழுத்தாக இல்லை. ஜஹ்ல் (மடமை) என்பதற்கும் முதல் எழுத்தாக வுள்ளது. மேலும் "ஜீம்' என்பதற்கு ஜமாலைத் தான் தர வேண்டும் என்று அல்லாஹ்விடம் கேட்பது அதிகப் பிரசங்கித்தனமாகும். எனவே இந்த துஆவை அச்சிடுவது மட்டுமின்றி அதை வாசிப்பது பாவமாகவும், குர்ஆனுடன் விளையாடியதாகவும் அமையும்.
எழுத்துப் பிழைகள்
திருக்குர்ஆனைப் பற்றி இன்னொரு செய்தியையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
உஸ்மான் (ரலி) அவர்களால் குர்ஆன் பல பிரதிகள் எடுக்கப்பட்ட போது எழுதுகின்ற எழுத்தர்கள் கவனக் குறைவாக சில இடங்களில் பிழையாக எழுதியுள்ளனர்.
இவ்வாறு பிழையாக எழுதப்பட்டாலும் மனனம் செய்தவர்களின் உள்ளங்களில் அது பாதுகாக்கப்பட்டு இருப்பதால் அதை அளவு கோலாகக் கொண்டு எழுத்தில் ஏற்பட்ட பிழைகளை அப்படியே தக்க வைத்து வருகின்றனர்.
ஏனெனில் பிழையாக எழுதப்பட்ட பிரதிகள் ஒருவரிடம் இருந்து, சரி செய்யப்பட்ட பிரதிகள் வேறொரு வரிடம் இருந்தால் குர்ஆனில் முரண்பாடு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை அது ஏற்படுத்தும் என்பதால் அந்த மூலப் பிரதியில் ஏற்பட்ட பிழைகளை அப்படியே இன்றளவும் தக்க வைத்து வருகின்றனர்.
குர்ஆனைப் பாதுகாப்பதற்கு இது அவசியமான ஏற்பாடு என்பதில் சந்தேகம் இல்லை. நெடிலைக் குறிப்பதற்காக அரபு மொழியில் அலிஃப் என்ற எழுத்தைச் சேர்க்க வேண்டும். இந்த எழுத்துப் பிழைகள் பெரும்பாலும் இந்த அலிஃப் என்ற எழுத்தைச் சுற்றியே அமைந்துள்ளது.
உதாரணமாக "காஃப்' என்ற எழுத்தில் அலிஃபைச் சேர்த்தால் "காஆ' என்று அது நெடிலாக மாறும். இப்படி நெடிலாக மாறுவதற்காகச் சேர்க்கப்பட வேண்டிய அலிஃபை நெடிலாக சேர்க்கத் தேவையில்லாத இடங்களில் கவனக் குறைவாகச் சேர்த்துள்ளனர்.
அது போல நெடிலுக்காக ஒரு அலிஃபை எழுதுவதற்குப் பதிலாக இரண்டு அலிஃபை எழுதியுள்ளனர். அந்த இடங்கள் யாவை என்பதும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.
அத்தகைய சொற்களும், அவை இடம் பெற்ற அத்தியாயங்களும் வசன எண்களும் தனியாக அடுத்தப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
இது தவிர இரண்டு இடங்களில் எழுத்தே மாற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம். 2:245வது வசனத்தில் என்று எழுதுவதற்குப் பதிலாக என்று எழுதியுள்ளனர். "ஸீன்' என்ற எழுத்தை எழுதுவதற்குப் பதிலாக "ஸாத்' என்ற எழுத்தை எழுதியுள்ளனர். ஸாத் இடம் பெற்றால் அதற்கு அர்த்தம் வராது. எனவே அந்தத் தவறை அப்படியே எழுதி ஸாத் என்ற எழுத்தின் மீது ஒரு சிறிய அளவில் ஸீனை எழுதி அடையாளம் காட்டியுள்ளனர்.
அதே போல 7வது அத்தியாயத்தின் 69வது வசனத்தில் என்று "ஸீன்' எழுதுவதற்குப் பதிலாக என்று "ஸாத்' எழுதியுள்ளனர். இரண்டும் ஏறக் குறைய நெருக்கமான உச்சரிப்பைக் கொண்ட எழுத்துக்களாக இருப்பதால் இந்தத் தவறு நேர்ந்திருக்கலாம்.
இந்தச் சிறிய அளவிலான எழுத்துப் பிழைகளைத் தவிர மற்ற அனைத்துமே சரியாகவே மூலப் பிரதியில் எழுதப்பட்டுள்ளன. இந்தப் பிழைகளும் கூட பாரதூரமான பிழைகள் இல்லை; சாதாரணமான மனிதர்களுக்கும் ஏற்படக் கூடிய பிழைகள் தான்.
குர்ஆன் இறைவனிடமிருந்து எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவமாகத் தான் அருளப்பட்டது. ஒலி வடிவமாக அருளப்பட்டதை எழுத்து வடிவமாக ஆக்கியது மனிதர்கள் தான். எனவே எழுத்துக்களில் ஒன்றிரண்டு பிழைகள் இருப்பதற்கு, இது மனிதர்களின் செயல் என்பது தான் காரணம். இறைவனே எழுதித் தந்திருந்தால் எழுத்திலும் பிழை ஏற்பட்டிருக்காது.
எனவே மனிதர்களால் ஏற்பட்ட இந்தத் தவறுகளை நாம் சுட்டிக் காட்டுவதால், திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று ஆகி விடாது. ஏனெனில் திருக்குர்ஆன் அதன் ஒலி வடிவத்தில் பாதுகாக்கப்பட்டே இருக்கின்றது. அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இதனால் தான் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படுவதைப் பற்றிப் பேசும் போது "கல்வியாளரின் உள்ளங்களில் இது பாதுகாக்கப்படுகிறது'' என்று குறிப்பிடுகிறது. (29:49)
தவறாக எழுதப்பட்ட இந்த வசனங்களை மனனம் செய்தவர்கள் சரியாகத் தான் மனனம் செய்தார்கள். மனனம் செய்வதிலே எந்தக் குழப்பமும் வரவில்லை. தவறாக எழுதப்பட்ட பிறகும் கூட உலக முஸ்லிம்கள் அனைவரும் வாசிக்கும் போது சரியாக வாசிக்கிறார்கள்.
இந்தச் சிறிய எழுத்துப் பிழைகளை அப்படியே தக்க வைத்திருப்பது குர்ஆனைப் பாதுகாப்பதில் முஸ்லிம் சமுதாயத்திற்கு இருந்த அக்கறையை எடுத்துக் காட்டுகிறது.
இதனால் தான் ஊருக்கு ஒரு குர்ஆன், காலத்திற்கு ஏற்ப ஒரு குர்ஆன் என்று குர்ஆனில் எந்த வேறுபாடும் இல்லாமல் உலகம் முழுவதும் ஒரே குர்ஆனாக, எந்தவித மாறுதலும் இல்லாமல் 14 நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது இது ஒரு குறை போல தோன்றினாலும், உண்மையில் இந்தச் சமுதாயம் குர்ஆனில் யாரும் கை வைப்பதை அனுமதிக்காது என்பதைக் காட்டுவதற்கான சான்று எனலாம்.
அரபு எழுத்துக்களில் ஏற்பட்ட மாறுதல்கள்
அடுத்து குர்ஆனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் அரபு எழுத்துக்களில் ஏற்பட்ட மாறுதல்களாகும்.
திருக்குர்ஆன் அருளப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்து விட்டன. 14 நூற்றாண்டுகள் கடக்கும் போது எந்த ஒரு மொழியும் அதனுடைய அடையாளங்களில் பலவற்றை இழந்து விடுவதைக் காண்கிறோம். அதனுடைய எழுத்துக்களிலே மாற்றம் ஏற்படும்; அமைப்புகளிலே மாற்றம் ஏற்படும்; பேச்சு வழக்குகளிலே மாற்றம் ஏற்படும். இப்படி பலவிதமான மாற்றங்கள் ஏற்படுவது எல்லா மொழிகளிலும் காணப்படுவது தான்.
அத்தகைய மாற்றங்கள் அரபு மொழியிலும் ஏற்பட்டன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கும், இப்போது உலகம் முழுவதும் உள்ள குர்ஆனுடைய எழுத்துக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன.
அன்று எழுதப்பட்ட மூலப் பிரதியை இன்று அரபு மொழி தெரிந்த வரிடத்திலே கொடுத்தால் அவரால் அதை வாசிக்கவே முடியாது என்ற அளவுக்கு மாறுதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மாறுதலால் குர்ஆனின் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்பட்டு விட்டதாகக் கருதக் கூடாது. ஏனென்றால் குர்ஆன் எழுத்து வடிவமாக வழங்கப்படவில்லை. ஒலி வடிவமாகக் தான் வழங்கப்பட்டது.
இறுதி வரை நிலைத்திருக்கும் ஒரு ஆவணமாக ஆக்குவதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுத்து வடிவமாக்கினார்கள்.
இறைவனிடமிருந்து குர்ஆன் நபிகளுக்கு வந்த போது ஒலி வடிவமாகத் தான் வந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த ஒலி வடிவம் இன்று வரை எந்த மாற்றமும் இல்லாமல் தான் இருந்து வருகிறது.
இன்றைக்கும் அருங்காட்சி யகத்தில் பாதுகாக்கப்படுகின்ற மூலப் பிரதியை பழங்கால எழுத்தை வாசிக்கத் தெரிந்தவரிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னால் அவர் வாசிப்பதும், இப்போது அச்சிடப்படும் குர்ஆனை வாசிப்பதும் ஒரே ஓசை கொண்டதாகவும், ஒரே உச்சரிப்பைக் கொண்டதாகவும் தான் இருக்கும். இரண்டுக்குமிடையே எந்த வித்தியாசமும் இருக்காது.
தமிழக மக்கள் புரிந்து கொள்வதற் காக ஒரு உதாரணத்தைக் குறிப்பிட லாம். தஞ்சையிலே சரஸ்வதி மஹாலில் பழங்காலச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்த தமிழ்ச் சுவடிகளை நம்மால் வாசிக்க முடியாது. ஆனால் அந்தச் சுவடியில் உள்ள ஒரு பகுதியை பழங்கால எழுத்தை வாசிக்கத் தெரிந்தவர் வாசித்தால் தற்போது நம் கைவசத்தில் இருக்கும் பிரதியைப் போன்று தான் வாசிப்பார்.
அதே போல் தான் அரபு மொழியின் எழுத்துக்களில் எவ்வளவு மாறுதல் ஏற்பட்டாலும், குர்ஆனுடைய உச்சரிப்பிலோ, ஓசையிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதற்கு எந்தக் குந்தகமும் ஏற்படவில்லை.
இதனால் தான் உள்ளங்களில் பாதுகாக்கப்படுகிறது என்று இறைவன் கூறுகிறான் (29:49).
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு அரபு மொழி என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்பதைப் பார்ப்போம்.
அரபு மொழியில் ஒரு புள்ளி உள்ள எழுத்துக்கள், இரண்டு புள்ளி உள்ள எழுத்துக்கள், மூன்று புள்ளி உள்ள எழுத்துக்கள், மேலே புள்ளி உள்ள எழுத்துக்கள், கீழே புள்ளி உள்ள எழுத்துக்கள் என உள்ளன.
அரபு மொழியில் ஐந்தாறு எழுத் துக்களுக்கு ஒரே வடிவம் உள்ளதால் இந்தப் புள்ளிகளை வைத்துத் தான் இன்ன இன்ன எழுத்து என அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் எழுத்துக்களுக்கு புள்ளிகள் இருக்கவில்லை. இதனால் ஒரே வடிவத்தில் பல எழுத்துக்கள் இருந்தன. ஆயினும் அந்த மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள், இந்த இடத்தில் இன்ன எழுத்துத் தான் இருக்க முடியும் என்று வாக்கிய அமைப்பைக் கவனித்துச் சரியாக வாசித்து விடுவார்கள்.
இஸ்லாம் உலகம் முழுவதும் பரவிய பிறகு, அரபு மொழியின் பொருள் தெரியாமலே இறை வேதம் என்பதற்காக அதை வாசிக்கின்ற பல் வேறு மொழி பேசும் மக்கள் பெருகிய போது, புள்ளிகள் இட்டு எழுத்துக்களை இனம் காட்டினார்கள்.
புள்ளிகள் அமைக்கப்பட்ட எழுத்துக்கள் மூலப் பிரதியில் கிடை யாது. புள்ளி வைப்பது மக்களுக்கு உதவிகரமாக இருப்பதால் முஸ்லிம் உலகம் இதை ஒட்டு மொத்தமாக அங்கீகரித்துக் கொண்டது.
குர்ஆனுக்காகச் செய்யப்பட்ட இந்த மாறுதலை அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் பழகிக் கொண்டார்கள். அவர்களும் பழங்கால எழுத்து முறையை மறந்து விட்டார்கள். இது அரபு மொழியில் செய்யப்பட்ட ஒரு முக்கியமான மாறுதல்.
உயிர், மெய் குறியீடுகள்
தமிழ் மொழியில் "க' என்று எழுதினால் பார்த்தவுடனே வாசிக்க முடியும். "கீ' என்பது வேறு வடிவம் பெறுவதால் அதை "கீ' என வாசிக்க முடியும். "கு' என்பது இன்னொரு வடிவம் பெறுவதால் அதை "கு' என்று வாசித்து விட முடியும்.
ஆனால் குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் அரபு மொழியில் உயிர், மெய் குறியீடுகள் இருக்கவில்லை. க, கி, கு, க் ஆகிய நான்கிற்கும் ஒரே வடிவம் தான் இருந்தது. எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ள இடத்தை வைத்து அதை எவ்வாறு வாசிப்பது என்பதை அன்றைய அரபுகள் கண்டு கொள்வார்கள்.
ஆயினும் இஸ்லாம் உலகின் பல பாகங்களுக்கும் பரவி, பொருள் தெரியாதவர்களும் குர்ஆனை வாசிக்கும் நிலை ஏற்பட்ட போது அவர்களுக்கு உதவிகரமாக இருக்க பிற்காலத்தில் உயிர், மெய் குறியீடுகள் (ஸேர், ஸபர், பேஷ், ஸுக்கூன்) இடப்பட்டன.
இந்த வேறுபாடுகள் எல்லாம் மூலப் பிரதியில் இருக்காது. அதில் க, கி, கு, க் என்று அனைத்துமே ஒரே மாதிரியாகத் தான் எழுதப்பட்டிருக்கும்.
இந்த மாறுதலையும் முஸ்லிம் உலகம் ஏற்றுக் கொண்டது. அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் குர்ஆனைத் தவிர மற்ற நூல்களில் உயிர், மெய் குறியீடுகளைப் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. குறியீடுகள் இல்லாமலே அவர்கள் அதனைச் சரியாக வாசித்து விடுவார்கள்.
அப்துல் மலிக் பின் மர்வானின் ஆட்சியில் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் என்ற அதிகாரியின் மேற்பார்வையில் பல அறிஞர்கள் கூடி இந்த மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். இதை உலக முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
குர்ஆனுடைய மூலப் பிரதியில் உள்ள எழுத்துக்கும், இப்போது உள்ள பிரதிக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பார்த்து குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று கருதி விடக் கூடாது.