திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு 5
திருக்குர்ஆனின் சில வசனங்கள் நபிகள் நாயகத்தின் மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டன. அவை "மக்கீ'' எனப்படும். மற்றும் சில வசனங்கள் நபிகள்
நாயகத்தின் மதீனா வாழ்க்கையின் போது அருளப்பட்டன. அவை "மதனீ'' எனப்படும்.
உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த திருக்குர்ஆன் மூலப் பிரதிகளில் "இந்த அத்தியாயம் மக்காவில் அருளப்பட்டது; இந்த அத்தியாயம் மதீனாவில் அருளப்பட்டது'' என்று எந்தக் குறிப்பும் இல்லை.
ஆனாலும் உலகமெங்கும் அச்சிடப்படும் குர்ஆன் பிரதிகளில் சில அத்தியாயங்களுக்கு மேல் "இது மக்காவில் அருளப்பட்டது' என்றும், வேறு சில அத்தியாயங்களின் மேல் "இது மதீனாவில் அருளப்பட்டது' என்றும் அச்சிடப்படுகின்றன.
திருக்குர்ஆனில்
ஒரு வசனத்தை மக்காவில் அருளப்பட்டது என்று முடிவு செய்ய வேண்டுமானால்
அதற்குத் தகுந்த சான்றுகள் இருக்க வேண்டும். இத்தகைய சான்றுகள் பல
வகைப்படும்.
இந்த
வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில்
அருளப்பட்டது என்று நபித் தோழர்கள் குறிப்பிட்டிருந்தால் அதனடிப்படையில்
அந்த வசனம் எங்கே அருளப்பட்டது என்று தீர்மானிக்க முடியும்.
அல்லது
ஒரு வசனத்தின் கருத்தைக் கவனத்தில் கொண்டு இந்த வசனம் இந்தக் கட்டத்தில்
தான் அருளப்பட்டிருக்க வேண்டும் என்று தீர்மானிக்கலாம். உதாரணமாக போர்
செய்வது தொடர்பான வசனங்கள் நபிகள் நாயகத்தின் மக்கா வாழ்க்கையில்
அருளப்பட்டிருக்க முடியாது. ஏனெனில் அவர்கள் மக்காவில் எதிரிகளை
எதிர்த்துப் போரிடும் நிலையில் இருக்கவில்லை.
அது
போல குற்றவியல் சட்டங்கள் குறித்த வசனங்களை எடுத்துக் கொண்டால் இது போன்ற
சட்டங்களை ஒரு ஆட்சியை நிறுவிய பிறகு தான் அமுல்படுத்த முடியும் என்ற
அடிப்படையில் அவை மதீனாவில் அருளப்பட்டவை என்று முடிவு செய்யலாம்.
இத்தகைய சான்றுகள் இல்லாமல் ஒரு அத்தியாயத்தையோ, ஒரு வசனத்தையோ மக்காவில் அருளப்பட்டது என்றோ, மதீனாவில் அருளப்பட்டது என்றோ கூறுவது மிகப் பெரும் தவறாகும்.
பல
அத்தியாயங்கள் இரண்டு கால கட்டங்களிலும் அருளப்பட்ட வசனங்களை உள்ளடக்கி
உள்ளன. எனவே ஒரு அத்தியாயம் முழுவதும் மக்காவில் அருளப்பட்டது என்றோ, மதீனாவில் அருளப்பட்டது என்றோ குறிப்பிடுவதாக இருந்தால் அதற்குத் தெளிவான ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
இத்தகைய ஆதாரங்கள் ஏதுமின்றியே மக்காவில் அருளப்பட்டவை, மதீனாவில்
அருளப்பட்டவை என்று அத்தியாயங்களின் துவக்கத்தில் அச்சிட்டு வருவதை
ஏற்றுக் கொள்ள முடியாது. இது குர்ஆனைக் குறித்து தவறான தகவல் தரும்
குற்றத்தில் சேர்ந்து விடும்.
எவ்விதச்
சான்றும் இல்லாமல் அவரவர் தமக்குத் தோன்றியவாறு இவ்வாறு குறிப்பிட்டதால்
தான் இது விஷயத்தில் மாறுபட்ட நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
உதாரணமாக, திருக்குர்ஆனில் கடைசி இரண்டு அத்தியாயங்களான 113, 114 ஆகிய
அத்தியாயங்கள் மக்காவில் அருளப்பட்டவை என்று ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்ட திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே
அத்தியாயங்கள் பற்றி கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ அவர்கள் மொழி பெயர்த்து
வெளியிட்ட குர்ஆன் பிரதிகளில் மதீனாவில் அருளப்பட்டவை எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
பல
அத்தியாயங்களில் இது போன்ற கருத்து வேறுபாடுகள் அதிக அளவில்
காணப்படுகின்றன. எனவே அத்தியாயங்களின் தலைப்பில் "இவை மக்காவில்
அருளப்பட்டவை' அல்லது "மதீனாவில் அருளப்பட்டவை' என்று குறிப்பிடுவதை நாம் அறவே தவிர்த்துள்ளோம்.
எங்கே அருளப்பட்டது என்பதைத் தீர்மானிக்க சிலர் தவறான அளவு கோல்களைப் பயன்படுத்தி உள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எந்த அத்தியாயத்தில் "மனிதர் களே'' என்று
அழைக்கும் வசனங்கள் உள்ளனவோ அந்த அத்தியாயங்கள் மக்காவில் அருளப்பட்டவை
என்பது இவர்களின் ஒரு அளவு கோல். இந்த அளவுகோல் எவ்வித ஆதாரமுமற்ற அளவு
கோலாகும். திருக்குர்ஆனின் நான்காவது அத்தியாயம் மதீனாவில் அருளப்பட்டது
என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அந்த அத்தியாயத்தில் "மனிதர்களே'' என்று அழைக்கும் வசனம் முதல் வசனமாக இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
அது போல் "நம்பிக்கை கொண்டவர்களே'' என்று
அழைக்கும் வசனங்கள் இடம் பெறும் அத்தியாயங்கள் மதீனாவில் அருளப்பட்டவை
என்பதும் இவர்களின் மற்றொரு அளவுகோலாகும். ஆனால் மக்காவில் அருளப்பட்ட 22-வது அத்தியாயத்தில் 77வது வசனத்தில் "நம்பிக்கை கொண்டவர்களே'' என்ற அழைப்பு இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.
எனவே திருக்குர்ஆனில் சில வசனங்கள் நபிகள் நாயகத்தின் மக்கா வாழ்க்கையிலும், சில
வசனங்கள் நபிகள் நாயகத்தின் மதீனா வாழ்க்கை யிலும் அருளப்பட்டன என்பது
உண்மையென்றாலும் இவை தக்க சான்றுகளின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்பட
வேண்டும். எந்த வசனங்கள் குறித்து இது போன்ற சான்றுகள் கிடைக்கவில்லையோ
அந்த வசனங்கள் குறித்து எந்த முடிவும் கூறாமல் இருப்பதே இறையச்ச முடைய
மக்களுக்குச் சிறந்ததாகும்.
நாம் இதுவரை கூறிய விளக்கங்களின் அடிப்படையில், அத்தியாயங்களின் பெயர்கள், முப்பது பாகங்கள், கால், அரை, முக்கால் பாகங்கள், ஸஜ்தா அடையாளங்கள், நிறுத்தல் குறிகள், ருகூவுக்கள், சில எழுத்துக்களைப் பெரிதாக எழுதுதல், மக்கீ
மதனீ என்று தலைப்பில் எழுதுதல் போன்றவை குர்ஆனின் மூலப் பிரதியில்
இல்லாமல் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்பதை எப்போதும் நினைவில் கொள்ள
வேண்டும்.
முஸ்லிம்
சமுதாயம் விழிப்புணர்வு பெற்று இந்த உண்மைகளைச் சரியாகப் புரிந்து
கொள்வார்களானால் மூலப் பிரதியில் இல்லாமல் பின்னாளில் குர்ஆன் ஓரங்களிலும்
தலைப்புகளிலும், வசனங்களுக்கு இடையிலும் சேர்க்கப்பட்ட அனைத்தையும் நீக்கி விடுவது குர்ஆனுக்குச் செய்யும் பெரிய தொண்டாக இருக்கும்.
வசனங்களின் எண்கள்
குர்ஆனில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன என்பது குறித்து அறிஞர்கள் பலவிதமான எண்ணிக் கையைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அலீ (ரலி) அவர்கள் 6218 என்கிறார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 6616 என்கிறார்கள்.
ஹுமைத் என்பார் 6212 என்கிறார்கள்.
அதா என்பார் 6177 என்கிறார்கள்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் 6204 என்றும் குறிப்பிடுகிறார்.
மக்கள் பொதுவாக 6666 வசனங்கள் என்று பரவலாகக் குறிப்பிடுகிறார்கள்.
இப்போது உலகம் முழுவதும் அச்சிடப்படும் குர்ஆன் பிரதிகளில் 6236 வசனங்கள் உள்ளன.
வசனங்கள் எத்தனை என்று அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ கூறவில்லை. மேலும், உஸ்மான்
(ரலி) அவர்களுடைய மூலப் பிரதியிலும் குர்ஆனுடைய மொத்த வசனங்கள் குறித்து
எந்தவொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் குறிப்பிடப்படவில்லை.
உஸ்மான்
(ரலி) அவர்கள் தொகுத்த மூலப் பிரதியில் ஒவ்வொரு வசனம் முடிவுறும் போது
அதன் இறுதியில் வசனத்தின் எண் குறிப்பிடப்படவில்லை. எந்தவொரு வசனத்தின்
முடிவும் மூலப் பிரதியில் அடையாளமிடப்படவில்லை.
எனவே
தான் வசனங்களை எண்ணும் போது ஒவ்வொருவரும் பல விதமான எண்ணிக்கையைக்
கூறுகிறார்கள். எண்ணிக்கை எத்தனை என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும்
எந்த எண்ணிக்கையைக் கூறினாலும் குர்ஆனில் எதுவும் அதிகரிப்பதோ, குறைவதோ இல்லை.
ஒருவர் இரண்டு வசனங்களை ஒரு வசனமாகக் கருதுவார்; இன் னொருவர் ஒரு வசனத்தை இரண்டு வசனங்களாகக் கருதுவார்; எங்கே வசனத்தை முடிப்பது என்பதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது.
உலகம்
முழுவதும் மக்கள் பயன்படுத்தி வருகின்ற குர்ஆனில் இப்போது
போடப்பட்டிருக்கின்ற எண்களை நாம் ஆய்வு செய்தால் எண்களிடுவதில் அறிஞர்களால்
போதுமான கவனம் செலுத்தப் படவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
சில இடங்களில் எழுவாயை ஒரு வசனமாகவும், பயனிலையை
இன் னொரு வசனமாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இரண்டையும் சேர்த்து ஒரு
வசனமாகக் கூறும் போது தான் அதனுடைய பொருள் முழுமை பெறும்.
வசனங்களைக் குறிக்க "ஆயத்'' என்ற சொல்லை திருக்குர்ஆன் பயன்படுத்துகிறது. "ஆயத்'' என்றால் சான்று என்று பொருள். ஒவ்வொரு வசனமும் முழுமையான கருத்தைத் தந்து சான்றாக அமைந்திருப்பதால் இவ்வாறு குர்ஆன் குறிப்பிடுகிறது.
ஒரு செய்தி முழுமை பெறும் போது தான் அது ஒரு சான்றாக ஆக முடியும். கருத்து முழுமை பெறாத போது அதைச் சான்று எனக் கருத முடியாது.
ஆனால்
வசனங்களுக்கு எண்கள் இட்டவர்கள் கருத்து முழுமை பெறுவதைக் கவனத்தில்
கொள்ளவில்லை என்பதை இப்போது போடப்பட்டிருக்கின்ற எண்களை ஆய்வு செய்தால்
நாம் தெரிந்து கொள்ளலாம்.
சில இடங்களில், ஒரு கருத்து ஒரு வசனமாகவும், அந்தக்
கருத்திலிருந்து விதிவிலக்கு இன்னொரு வசன மாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த இரண்டையும் சேர்த்து ஒரு எண்ணாக அவர்கள் அமைத்திருந்தால் அதைப்
புரிந்து கொள்வதற்கு எளிதாக இருந்திருக்கும்.
உதாரணத்திற்காகச் சில வசனங்களை நாம் காண்போம்.
நான்காவது அத்தியாயத்தில் 168, 169 ஆகிய இரு வசனங்களை எடுத்துக் கொள்வோம்.
இதில் "அவர்களுக்கு வழி காட்ட மாட்டான்'' என்பது 168வது வசனத்திலும், "நரகத்தின் வழியைத் தவிர'' என்பது 169வது
வசனத்திலும் உள்ளது. இரண்டும் சேர்ந்து தான் ஒரு வாக்கியம் என்பதை யாரும்
விளங்க முடியும். ஆனாலும் இதை இரண்டு வசனங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.
7வது அத்தியாயத்தின் 121, 122 ஆகிய வசனங்களை எடுத்துக் கொண்டால், 121-ல் "நாங்கள் அகிலத்தின் இறைவனை நம்பி னோம் எனக் கூறினார்கள்'' என்றும் 122-ல் "மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய'' என்றும் உள்ளது.
"மூஸா மற்றும் ஹாரூனின் இறை வனாகிய'' என்பதில் எந்தவொரு கருத்தும் முழுமை பெறவில்லை. "மூஸா மற்றும் ஹாரூனின் இறைவ னாகிய அகிலத்தின் இறைவனை நாங்கள் நம்பினோம்'' என்று
சொன்னால் தான் வாக்கியம் முழுமை பெறுகிறது. இரண்டும் சேர்ந்து தான் ஒரு
வாக்கியம் என்பதை யாரும் விளங்க முடியும். ஆனாலும் இதையும் இரண்டு
வசனங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.
இதே போல் 11வது அத்தியாயத் தில் 96, 97 வசனங்களை எடுத்துக் கொண்டால் 96வது வசனத்தில் "மூஸாவைத் தகுந்த சான்றுகளோடு அனுப்பினோம்'' என்று இருக்கிறது. 97வது வசனத்திலே "ஃபிர்அவ் னிடம்'' என்று இருக்கிறது.
"ஃபிர்அவ்னிடம்'' என்பது இந்த 96 வசனத்துடன் இணைய வேண்டிய சொல். ஆனாலும் ஃபிர்அவ்னிடமும், அவனது கூட்டத்தினரிடமும் என்பதை தனியாகப் பிரித்ததால் அதற்குப் பொருள் இல்லாமல் போய் விடுகிறது.
இப்படி
ஏராளமான வாக்கியங்களைக் கருத்து முழுமை பெறாத வகையில் வசனங்களாகப்
பிரித்திருப்பதை நாம் பார்க்கிறோம். சில இடங்களிட ஒரு வாக்கியத்தை நான்கு, ஐந்து
வசனங்களாகக் கூட பிரித்து வைத்தி ருக்கிறார்கள். கருத்து முழுமை பெறாத ஒரே
ஒரு சொல்லைக் கூட ஒரு வசனம் என்று சில இடங்களில் கணக்கிட்டிருக்கிறார்கள்.
இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குர்ஆன் என்பது அதனுடைய ஆழமான கருத்துக்களுக்காகவும், அதன் அழகான நடைக்காகவும் தனிச் சிறப்பு பெற்றிருக்கிறது.
வசனங்களைப்
பிரிப்பதென்றால் அதற்கு இரண்டு அளவு கோல்கள் இருக்க வேண்டும். நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் ஓதும் போது எந்த இடத்தில் நிறுத்தினார்களோ அந்த
இடத்தை ஒரு வசனம் என்று கணக்கிட்டிருந்தால் அது ஏற்கத் தக்கதாக இருக்கும்.
அல்லது ஒரு கருத்து எந்த இடத்தில் முழுமை பெறுகிறதோ அதை ஒரு வசனம் என்று
கணக்கிட்டிருந்தாலும் அறிவுப் பூர்வமானதாக இருந்திருக்கும். ஆனால் இந்த
இரண்டு அளவுகோலின் அடிப்படையில் வசனங்களுக்கு எண்கள் இடப்படவில்லை.
மாறாக
ஒவ்வொரு வசனத்தையும் குறிப்பிட்ட ஒரு எழுத்தைக் கொண்டு முடிக்க வேண்டும்
என்பதைத் தான் வசனங்களைப் பிரிப்பதற்கு அளவு கோலாகக் கொண்டுள்ளனர்.
உதாரணமாக "யஃலமூன்' "தஃலமூன்' "யஃப்அலூன்' இப்படி
வருகிறதா என்பதைப் பார்த்து அந்த இடங்களில் வசனங்களை முடித் தார்கள்.
ஆனால் உண்மையிலேயே அவர்கள் கருத்தைத் தான் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
பொருத்தமில்லாமல்
வசனங்களுக்கு எண்களிட்டதால் வேறு சில இடையூறுகளும் ஏற்படுகின்றன. ஒரு
மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு குர்ஆன் மாற்றப்படும் போது முழுமை பெறாத
அந்தப் பகுதியை முழுமைப்படுத்துவதற்காக அடைப்புக் குறியில் சில
வார்த்தைகளைச் சொந்தமாகச் சேர்க்கும் நிலை ஏற்படுகிறது.
எல்லா மொழிகளிலும் அதிக அளவிலான அடைப்புக் குறிகள் இடம் பெறுவதற்கு கருத்து முழுமை பெறாத இடத்தில் வசனங்களைப் பிரித்தது தான் காரணம்.
மேலும் வசனங்களுக்கு எண்கள் போடப்பட்ட இந்த வரலாறைத் தெரியாதவர்கள், இறைவன் தான் இவ்வாறு வசனங்களுக்கு எண்களை இட்டிருக்கிறான் என்று நினைப் பார்கள்; முழுமை பெறாத வசனங்களைப் பார்த்தால் அவர்களுடைய நம்பிக்கை பாதிப்படையும் என்ப தையும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
அவர்கள் அரபு மொழி பேசுவோராக இருந்ததால் மொழி பெயர்ப்பினால் ஏற்படும் சங்கடங்களும், மற்றவர்கள் குர்ஆனைப் பற்றி தவறான எண்ணம் கொள்வதற்கு நாம் காரணமாக ஆகி விட்டோம் என்பதும் அவர்களுக்குத் தோன்றவில்லை.
ஆனாலும் இப்போது ஆதாரங்களை எடுத்துக் காட்டுவற்கும், விவாதங்கள் புரிவதற்கும், சொற் பொழிவுகள் நிகழ்த்துவதற்கும், குறிப்பிட்ட ஒரு வசனத்தைத் தேடி எடுப்பதற்கும் இந்த வசன எண்கள் உதவியாக இருக்கின்றன.
இப்போது
இதில் ஒவ்வொருவரும் மாற்றம் செய்யப் புகுந்தால் தேவையற்ற குழப்பங்கள் தான்
ஏற்படும். எனவே எந்த எண்களைச் சில நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறோமோ
அதில் நாம் எந்த மாறுதலும் செய்யவில்லை.
அதே
சமயத்தில் முழுமை பெறாத அந்த வசனங்களை எல்லாம் சேர்த்து தமிழாக்கம் செய்து
தேவையற்ற அடைப்புக் குறிகள் வருவதைத் தவிர்த்திருக்கிறோம்.
வசனங்களுக்கு எண்கள் போட்டவர்கள் தாமாகத் தான் போட்டனர் என்பதற்கு இரண்டு தமிழ் மொழி பெயர்ப்புகளை உதாரணமாகக் கூறலாம்.
ஆ.கா.அப்துல் ஹமீத் பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பில் 6வது அத்தியாயம் 73வது வசனத்தை ஒரு வசனமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையே நிஜாமுத்தீன் மன்பஈ அவர்கள் 73, 74 என
இரண்டு வசனங்களாக எண்ணியுள்ளார். இதனால் இந்த அத்தியாயம் முழுவதும் இரண்டு
மொழிபெயர்ப்புகளுக் கிடையே ஒரு எண் வித்தியாசத்தில் அமைந்திருப்பதைக்
காணலாம்.
சில
சகோதரர்களுக்கு இது வரை கேள்விப்பட்டிராத செய்திகளைப் போல் இது தோன்றலாம்.
ஆனால் ஒவ்வொரு கால கட்டத்திலும் இது அந்தந்தக் காலத்தவருக்கு
நினைவூட்டப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது.
குர்ஆனில் இல்லாத வசன எண்கள், ஸஜ்தாவுடைய அடையாளங்கள், பத்து வசனங்கள் முடியும் போது ஒரு அடையாளம், நிறுத்தல் குறிகள் இவையெல்லாம் குர்ஆனில் கலக்கவே கூடாது என்று பைஹகி இமாம் கூறியதாக அறிஞர் ஸுயூத்தி அவர்கள் தமது "அல் இத்கான்' என்ற நூலில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.
ஐந்து வசனங்களுக்கு ஒரு அடையாளம், பத்து வசனங்களுக்கு ஒரு அடையாளம், அத்தியாங்க ளுடைய பெயர்கள், வசனங்களு டைய எண்கள், இவற்றையெல்லாம் எழுதுவது வெறுக்கத்தக்கது என்றும் இதே நூலில் "சுலைமி' என்ற அறிஞர் கூறியதை ஸுயூத்தி எடுத்துக் காட்டுகிறார்.
இப்னு
மஸ்வூத் (ரலி) என்ற நபித் தோழரிடம் ஒரு கையெழுத்துப் பிரதியைக் கொண்டு
வந்தனர். ஒவ் வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் அதற்கு ஒரு பெயர் இடம்
பெற்றிருந்தது. உடனே அதை இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அழித்து விடச்
சொன்னார்கள். குர்ஆனில் இல்லாததைக் குர்ஆனில் சேர்க்கக் கூடாது என்று
அவர்கள் தடுத்திருக்கிறார்கள்.
எனவே குர்ஆனில் நமது வசதிக்காக நாம் ஏற்படுத்திக் கொண்டவை எவை, குர்ஆனிலே
அல்லாஹ் அமைத்துத் தந்தவை எவை என்ற வேறுபாட்டை நாம் விளங்கி
வைத்திருந்தால் ஒவ்வொரு வரும் இதைப் புரிந்து வைத்திருந்தால் குர்ஆன் என்ற
பெயரால் யாரும் மக்களை வழி கெடுத்துவிட முடியாது.
சுருக்கமாகச்
சொல்வதென்றால் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத் திலும் "பிஸ்மில்லா
ஹிர்ரஹ்மானிர் ரஹீம் என்பதைத் தவிர வசன எண்களோ அத்தியாயத்தின் பெயர் களோ
இடையிடையே எழுதப்படுகின்ற விஷயங்களோ மூலப் பிரதியில் இல்லை. வசனங்கள்
மாத்திரம் தான் இறைவன் புறத்திலிருந்து வந்தது என்பதை நாம் கவனத்தில்
வைத்திருக்க வேண்டும்