திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு 4
ருகூவுகள்
தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வளவு தான் ஓத வேண்டும் என்று சிலர் தன்னிச்சையாக எவ்வித ஆதாரமுமின்றி முடிவு செய்து திருக்குர்ஆனை 558 ருகூவுகளாகவும் பிரித்தனர்.
இதற்கு அடையாளமாக ஓரங்களில் "ஐன்' என்ற அரபு எழுத்தை அச்சிட்டுள்ளனர். இதை ஐன் என்றும் குறிப்பிடுகின்றனர்.
தொழுகையைப் பொறுத்த வரை ஒவ்வொருவரும் தமக்கு இயன்ற அளவுக்கு ஓதலாம் எனத் திருக்குர்ஆன் அனுமதிக்கிறது (அல்குர்ஆன் 73:20)
இந்த அளவு தான் ஓத வேண்டும் என்று கூறுவது மேற்கண்ட குர்ஆன் வசனத்திற்கு முரணாக இருப்பதால் இந்தப் பிரிவை நமது இந்த வெளியீட்டில் அடியோடு புறக்கணித்து விட்டோம். "ஐன்' என்ற எழுத்தை அச்சிடுவதைத் தவிர்த்து விட்டோம். ஏனெனில் தொழுகை எனும் வணக்கத்தில் தலையிடுவதாக இந்தப் பிரிவு அமைந்துள்ளது. ஒரு ரக்அத்தில் இவ்வளவு தான் ஓத வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
ஸஜ்தாவின் அடையாளங்கள்
ஸஜ்தாவைப் பற்றிக் கூறுகின்ற வசனங்கள் மிக அதிக அளவில் இருந்தும் 14 வசனங்களின் ஓரங்களில் ஸஜ்தா என்று அச்சிட்டுள்ளனர்.
எந்தெந்த வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கே நாம் விவாதிக்கவில்லை.
(ஸஜ்தா வசனங்கள் எவை என்பதைக் குறித்து, "விளக்கம்' என்ற தலைப்பில் 396வது குறிப்பில் தக்க ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.)
திருக்குர்ஆனின் மூலப் பிரதியில் இல்லாத இத்தகைய சொற்களை ஓரங்களில் அச்சிட்டிருக்கக் கூடாது என்பதைத் தான் இங்கே நாம் சுட்டிக் காட்டுகிறோம்.
உதாரணமாக, 22வது அத்தியாயமான அல்ஹஜ் அத்தியாயத்தில் 77வது வசனத்தின் ஓரத்தில் அரபியில் ஒரு வாக்கியத்தை அச்சிட்டுள்ளனர். "இது ஷாபி இமாமின் கருத்துப்படி ஸஜ்தாச் செய்ய வேண்டிய வசனம்'' என்பது இதன் கருத்து.
ஷாபி இமாமுடைய கருத்துப்படி ஸஜ்தா செய்ய வேண்டும் என்ற மனித அபிப்பிராயத்தை ஏன் குர்ஆனுடன் அச்சிட வேண்டும் என்பது சிந்திக் கத்தக்க கேள்வியாகும்.
ஷாபி இமாமுடைய காலத்துக்குப் பிறகு தான் ஓரங்களில் இவ்வாறு தேவையற்றவைகளை அச்சிடும் வழக்கம் தோன்றியது என்பதற்கு இதையும் ஆதாரமாகக் கொள்ளலாம்.
நிறுத்தல் குறிகள்
திருக்குர்ஆனில் ஒவ்வொரு வசனத்தின் இறுதியிலும், வசனங்களுக்கு இடையேயும் சில அடையாளங்களையும் சேர்த்து தற்போது அச்சிட்டு வருகின்றனர். இத்தகைய அடையாளங்கள் எதுவும் இன்றளவும் பாதுகாக்கப்படுகின்ற மூலப் பிரதியில் இல்லை.
* இந்த இடங்களில் நிறுத்துவது அவசியம்
* இந்த இடங்களில் நிறுத்துவது சிறந்தது
* இந்த இடங்களில் நிறுத்தாமல் தொடர்ந்து ஓதுவது சிறந்தது
* இந்த இடங்களில் நிறுத்துவதும், நிறுத்தாமலிருப்பதும் சமமானது
* இந்த இடங்களில் நபிகள் நாயகம் (ஸல்) நிறுத்தியுள்ளார்கள்
* இந்த இடங்களில் ஜிப்ரீல் நிறுத்தியுள்ளார்கள்
என்றெல்லாம் சில அடையாளங்கள் மூலம் உணர்த்துகின்றனர். இவை அனைத்தும் எந்த ஆதாரமும் இல்லாத கட்டுக் கதைகளாகும்.
இப்படி குர்ஆன் நெடுகிலும் சில இடங்களில் ஜீம், சில இடங்களில் ஸே, சில இடங்களில் வாவ், சில இடங்களில் மீம், சில இடங்களில் காஃப், சில இடங்களில் லாம் அலிஃபும், சில இடங்களில் ஸாது, சில இடங்களில் ஸாது லாம் ஏ - இப்படி ஏராளமான அடையாளங்களை இடையிடையே நுழைத்திருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வசனத்தையும் நிறுத்தி ஓதுவார்கள் என்பதற்கு மட்டும் தான் சான்றுகள் உள்ளனவே தவிர, இவர்கள் குறிப்பிட்டுள்ள இந்தக் குறியீடுகளுக்கும், அது தொடர்பாகக் கூறும் சட்டங்களுக்கும் எந்தச் சான்றும் இல்லை. ஒருவர் தமது விருப்பப்படி எந்த இடத்திலும் நிறுத்தி வாசிக்கலாம்.
இது போன்ற அடையாளங்களைத் தவிர்த்திருந்தால் குர்ஆன் இன்னும் அதன் தனித் தன்மையோடு துலங்கியிருக்கும்.
உதாரணமாக, மூன்றாவது அத்தியாயத்தில் 94வது வசனத்தின் ஓரத்தில் ஜிப்ரீல் நிறுத்திய இடம் என்று எழுதியிருக்கிறார்கள். ஜிப்ரீல் இந்த இடத்திலே நிறுத்தினார் என்பதற்கு எந்த நூலிலும் எந்த ஆதாரமும் இல்லை.
ஒரு ஆதாரமும் இல்லாமல் அவரவர் தமக்குத் தோன்றியதை எல்லாம் ஓரங்களில் எழுதினார்கள். அதுவே பிற்காலத்தில் அச்சு வடிவமும் பெற்றிருக்கிறது என்பதை நாம் கவனத்திலே கொள்ள வேண்டும்.
வேண்டாத ஆய்வுகள்
"கஹ்ஃபு'' (குகை) என்ற 18 வது அத்தியாயத்தின் 19வது வசனத்தில் "வல்யத்தலத்தஃப்'' என்ற ஒரே ஒரு சொல்லை மட்டும் பெரிய எழுத்தாக எழுதியிருப்பார்கள்.
திருக்குர்ஆனின் எழுத்துக்களை எண்ணி, அதில் சரிபாதி இடமாக இந்தச் சொல் இடம் பெற்றுள்ளது என ஓரத்தில் குறிப்பு எழுதியுள்ளனர்.
இப்படியெல்லாம் எழுத்துக்களை, புள்ளிகளை, குறியீடுகளை எண்ணு மாறு அல்லாஹ்வோ, அவனது தூதரோ நமக்குக் கட்டளையிடவில்லை. ஒரு சொல் சரிபாதி இடத்தில் அமைந்திருப்பதால் அதற்கு மார்க்கத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.
இதில் மக்களுக்கு எந்த அறிவுரையும், வழிகாட்டலும் இல்லை. மேலும் குர்ஆனில் அதை மட்டும் பெரிதாக எழுதியிருப்பது குர்ஆனுடன் விளை யாடுவதாகவே அமையும்.
இதெல்லாம் வேண்டாத வேலைகள். பிற்காலத்தில் வரும் மக்களுக்கு இது ஒரு புரியாத புதிர் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும்.
இவ்வாறு எழுத்துக்களை எண்ணியே சிலர் வழிகெட்டுப் போனதையும் இங்கு நினைவு கூர வேண்டும்