dailyvideo


திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு 3


சமுதாயத்தின் அங்கீகாரம்

உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்த ஏற்பாட்டை அன்றைய சமுதாயத்தில் இருந்த நபித் தோழர்களிலும், நல்லோர்களிலும் யாருமே ஆட்சேபிக்கவில்லை.
இது தேவையான, சரியான ஏற்பாடு தான் என்பதை ஒப்புக் கொண்டார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) மட்டும் தம்முடைய பழைய பிரதியை எரிக்க முதலில் மறுத்து விட்டார். அவரும் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்தப் பணியின் முக்கியத்துவத்தையும், நியாயத்தையும் அறிந்து இதற்குக் கட்டுப்பட்டு விட்டார்.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் மற்றும் நல்லறிஞர்களின் ஏக மனதான முடிவோடு, அனைவரின் கண்காணிப்பிலும் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது.

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது குர்ஆனை எழுத்து வடிவில் முறைப்படுத்தும் குழுவுக்கு தலைமை வகித்தவர். எனவே குர்ஆன் அத்தியாயங்களை வரிசைப்படுத்தவும், பல்வேறு பிரதிகள் தயாரிக்கவும் உஸ்மான் (ரலி) நியமித்த குழுவுக்கும் அவரையே தலைவராக நியமித்தார்கள்.

இந்தக் குழுவில் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி), ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அல் ஹாரிஸ் (ரலி) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தப் பணிகளை உஸ்மான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 25ம் ஆண்டு செய்தார்கள். அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து 15 ஆண்டுகளிலேயே குர்ஆன் இப்போதிருக்கும் வரிசைப்படி அமைக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதிகள் எடுத்தல்

மேலும் ஏராளமான பிரதிகளை எடுக்கச் சொல்லி அந்தப் பிரதிகளை தமது ஆளுகையின் கீழ் இருந்த எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பி னார்கள். அந்தப் பிரதிகளின் அடிப்படையிலேயே மற்றவர்களும் பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். ஒவ்வொருவரும் தம்மிடம் வைத் துள்ள முழுமைப்படுத்தப் படாத பழைய பிரதிகளை எரித்து விடுமாறும் ஆணை பிறப்பித்தார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது.

உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் "இஸ்தன்புல்'' நகரத்தில் உள்ள அருங்காட்சி யகத்திலும், இன்னொன்று ரஷியாவின் "தாஷ்கண்ட்'' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக் கப்பட்டு வருகிறது.

அவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள குர்ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம்.

இது தான் திருக்குர்ஆன் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்ட வரலாறு.

அத்தியாயங்களின் பெயர்கள்

திருக்குர்ஆனில் உள்ள 114 அத்தியாயங்களும் தனித் தனி பெயர்களுடன் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்தப் பெயர்களில் பெரும்பாலானவற்றை அல்லாஹ்வோ, அவனது தூதரோ, அபூபக்ர் (ரலி) அவர்களோ, உஸ்மான் (ரலி) அவர்களோ சூட்டவில்லை.

உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த மூலப் பிரதியில் எந்தவொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் அந்த அத்தியாயத்திற்குப் பெயர் எதையும் குறிப்பிடவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று மட்டுமே குறிப்பிட்டார்கள். ஒரு அத்தியாயம் முடிந்து மறு அத்தியாயம் துவங்குகிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

ஆயினும் சில அத்தியாயங்களுக்கு மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளனர். வேறு சில அத்தியாயங்களுக்கு நபித்தோழர்கள் பெயரிட்டனர். மற்றும் சில அத்தியாயங்களுக்கு பிற்காலத்தில் வந்தவர்கள் பெயர் சூட்டினார்கள்.

முதல் அத்தியாயம் "அல் ஃபாத்திஹா' என்று பரவலாக மக்களால் அறியப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அத்தி யாயத்தின் பெயரை "ஃபாதிஹதுல் கிதாப்' (இவ்வேதத்தின் தோற்றுவாய்) எனக் குறிப்பிட்டுள்ளனர்.

(நூல் புகாரி: 756, 759, 762)

இந்த அத்தியாயத்திற்கு "உம்முல் குர்ஆன்' (குர்ஆனின் தாய்) என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரிட்டுள்ளனர்.

(நூற்கள்: புகாரி 7407, முஸ்லிம் 596)

"அஸ்ஸப்வுல் மஸானீ'' (திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்) எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரிட்டுள்ளனர்.

(நூல்: புகாரி 7407)

திருக்குர்ஆனிலும் இப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

(திருக்குர்ஆன் 15:87)

"அல்குர்ஆனுல் அளீம்' (மகத் தான குர்ஆன்) எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.

(நூல்: புகாரி 7407)

திருக்குர்ஆனிலும் இப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

(திருக்குர்ஆன் 15:87)

இரண்டாவது அத்தியாயம் "அல் பகரா' என்று கூறப்படுகிறது. இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே இந்த அத்தியாயத்தைக் குறிப் பிட்டுள்ளனர்.

(நூல்: புகாரி 4008, 5010, 5040, 5051)

மூன்றாவது அத்தியாயமான "ஆலு இம்ரான்' அத்தியாயத்தை இவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

(நூல்: திர்மிதீ 2802)

நான்காவது அத்தியாயத்தின் பெயர் "அன்னிஸா' எனப்படுகிறது. இப்பெயரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர்.

(நூல்: முஸ்லிம் 879, 3035)

ஐந்தாவது அத்தியாயம் "அல் மாயிதா' எனப்படுகிறது. இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரிட்டதாக நாம் காணவில்லை. ஆயினும் நபித் தோழர்கள் காலத்தில் இந்த அத்தியாயத்திற்கு "அல்மாயிதா' எனக் குறிப்பிட்டுள்ளதற்கு சான்றுகள் உள்ளன.

(நூற்கள்: புகாரி 347, முஸ்லிம் 401, 552)

ஆறாவது அத்தியாயம் "அல் அன்ஆம்' எனப்படுகிறது. இந்த அத்தியாயத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு பெயரிட்டதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. ஆயினும் நபித் தோழர்கள் இந்த அத்தியாயத்தை "அல் அன்ஆம்' என்று குறிப்பிட்டுள்ள தற்குச் சான்றுகள் உள்ளன.

(நூல்: புகாரி 3524)

இது போல் 114 அத்தியாயங்களையும் தேடினால் அனைத்து அத்தியாயங்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயர் சூட்டவில்லை என்பதை அறியலாம்.

நபித்தோழர்கள் பெயரிட்டுள்ள சில அத்தியாயங்களுக்குக் கூட பிற்காலத்தில் வேறு பெயர் சூட்டப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

உதாரணமாக 65வது அத்தியாயம் "தலாக்'' என்ற பெயரில் அச்சிடப்படுகிறது. ஆனால் நபித் தோழர்கள் இதை "நிஸாவுல் குஸ்ரா' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

(நூல்: புகாரி 4910)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தியாயங்களுக்குச் சூட்டிய பெயர்களானாலும், நபித்தோழர்கள் சூட்டிய பெயர்களானாலும் அதை அத்தியாயங்களின் துவக்கத்தில் எழுதுமாறு நபியவர்கள் எந்தக் கட்டளையையும் பிறப்பிக்கவில்லை.

உஸ்மான் (ரலி) அவர்கள் வரிசைப்படுத்தி, தொகுத்து இன்று வரை பாதுகாக்கப்பட்டு வரும் மூலப் பிரதியில் எந்த அத்தியாயத்தின் துவக்கத்திலும் எந்தப் பெயரும் எழுதப்படவில்லை.

மிகவும் பிற்காலத்தில் தான் அத்தியாயங்களின் பெயர்களை அவற்றின் துவக்கத்தில் எழுதும் வழக்கம் வந்தது.

எனவே அத்தியாயங்களின் துவக்கத்தில் பெயர்களை எழுத வேண்டும் என்பது அவசியமில்லை.

முப்பது பாகங்கள்

அடுத்தது திருக்குர்ஆன் முப்பது ஜுஸ்வு எனும் பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இருப்பதை நாம் அறிவோம். இது பிற்காலத்தில் வந்தவர்களால் வசதிக்காகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு பிரிக்குமாறு அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை. உஸ்மான் (ரலி) அவர்களின் மூலப் பிரதியிலும் 30 பாகங்கள் இல்லை.

திருக்குர்ஆனுடைய அத்தியாயங்களைப் பொருத்த வரை அனைத்து அத்தியாயங்களும் சமமான அளவு கொண்டதாக இருக்கவில்லை. சில அத்தியாயங்கள் 286 வசனங்களைக் கொண்டதாகவும், சில அத்தியா யங்கள் மூன்றே மூன்று வசனங்களைக் கொண்டதாகவும் அமைந்தி ருப்பதைக் காணலாம்.

இந்த நிலையில் மாதத்திற்கு ஒரு முறையாவது குர்ஆனை முஸ்லிம்கள் ஓதி முடிக்க வேண்டும் எனக் கருதிய சிலர் அதற்கேற்ப சம அளவிலான பாகங்களாகக் குர்ஆனைப் பிரித்தனர்.

குர்ஆனை முப்பது நாட்களில் சம அளவில் ஓதியாக வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த கட்டளையும் பிறப்பிக்கவில்லை; நபித் தோழர்களிடமும் இத்தகைய வழிமுறை இல்லை.

முப்பது பாகங்களாகப் பிரித்த போது அறிவுப்பூர்வமான வழி முறையைக் கூட அவர்கள் கடைப் பிடிக்கவில்லை. குர்ஆனுடைய மொத்த சொற்களை எண்ணி அதை முப்பதால் வகுத்து அதனடிப்படையில் முப்பது பாகங்களாகப் பிரித்துள்ளனர். இதனால் கருத்துச் சிதைவு ஏற்பட்டாலும் அது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

ஒரு முழு அத்தியாயத்தைக் கூட மூன்று துண்டுகளாகப் பிரித்துள் ளனர். உதாரணம் பகரா அத்தியாயம்.

ஒரு அத்தியாயத்தின் ஒரு பாதி முந்திய பாகத்திலும், அடுத்த பாதி அடுத்த பாகத்தில் இருக்குமாறும் பிரித்துள்ளனர்.

உதாரணத்திற்கு முஸ்லிம்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்ற "யாஸீன்'' என்ற அத்தியாயத்தை எடுத்துக் கொண்டால் அதில் 21 வசனம் வரை 22ம் பாகத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். 22ஆம் வசனம் முதல் இறுதி வரை 23ம் பாகத்தில் சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஐந்தாம் பாகத்தின் முதல் வசனம் "உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள மற்ற பெண்களும்'' என்று ஆரம்பமாகிறது. இந்த வசனத்தை இப்படி ஆரம்பித்தால் எந்தப் பொருளும் தராது. காரணம் இது முந்தைய வசனத்தின் தொடர்ச்சியாகும். அந்த வசனத்தில் உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள்....... என்று ஒரு பட்டியலைக் கூறி இவர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்று கூறப்படுகிறது. அந்தப் பட்டியலின் தொடர்ச்சி தான் உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர என்ற அடுத்த வசனம். இவ்விரு வசனங்களில் ஒன்றை நான்காம் பாகத்திலும், இன்னொன்றை ஐந்தாம் பாகத்திலும் பிரித்து பொருளற்றதாக ஆக்கியுள் ளனர்.

இந்த வசனத்தை மட்டும் வாசித்தால் அதற்கு எந்த அர்த்தமும் இருக்காது. முந்தைய வசனத்தோடு சேர்த்தால் மட்டுமே இதற்கு அர்த்தம் வரும். குர்ஆனை முப்பது பாகங்களாகப் பிரித்தவர்கள் சொற்களின் எண்ணிக்கையைத் தான் கவனத்தில் கொண்டார்களே தவிர கருத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஒரு அத்தியாயத்தின் ஒரே ஒரு வசனத்தை மட்டும் ஒரு பாகத்திலும், அந்த அத்தியாயத்தின் மீதியை அடுத்த பாகத்திலும் சேர்த்துள்ளனர். உதாரணம் 15 ஆம் அத்தியாயம். இதன் முதல் வசனத்தை மட்டும் 13வது பாகத்தில் சேர்த்துள்ளனர். மீதியை 14வது பாகத்தில் சேர்த்துள்ளனர்.

இது இறைவனே வகுத்துத் தந்தது போல ஒரு எண்ணத்தையும் கூட ஏற்படுத்தியிருக்கிறது.

அன்றாடம் குறிப்பிட்ட அளவில் குர்ஆனை ஓதுவதற்கு உதவியாக இருக்கும் என்பதைக் கவனத்தில் கொண்டு பிற்காலத்தில் வந்த ஒட்டு மொத்த சமுதாயமும் இதை ஏற்றுக் கொண்டு விட்டது.

இதனை நம்முடைய வசதிக்காக நாம் தான் பிரித்தோம் என்பதை ஒவ் வொருவரும் தெரிந்திருக்க வேண்டும்.

இன்று வரைர பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள மூலப் பிரதியில் முப்பது பாகம் என்பது இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஒவ்வொரு மாதமும் குர்ஆனை ஒரு தடவை ஓதி முடிக்க வேண்டும் என்ற கட்டாயமும் மார்க்கத்தில் இல்லை. அவரவர் வசதிக்கு ஏற்ப ஓதுமாறு தான் மார்க்கத்தில் கட்டளை இருக்கிறது.

(பார்க்க: திருக்குர்ஆன் 73:20)

எனவே 30 பாகங்களாகப் பிரித்ததற்கு மார்க்கரீதியான எந்த நியாயமும் இல்லை.

முப்பது பாகங்களாகப் பிரித்தது மட்டுமின்றி ஒவ்வொரு பாகத்தையும் நான்கு கால் பாகங்களாகவும் பிரித்தனர். அதற்கு அடையாளமாக முதல் கால் பாகத்தில் "அர்ருபுவு'' (கால்) என்ற சொல்லையும், இரண்டாவது கால் பாகத்தில் "அந்நிஸ்ஃப்' (அரை) என்ற சொல்லையும், மூன்றாவது கால் பாகத்தில் "அஸ்ஸலாஸத்' (முக்கால்) என்ற சொல்லையும் ஓரத்தில் அச்சிட்டு வருகின்றனர்.

இதுவும் பிற்காலத்தில் செய்யப்பட்ட ஏற்பாடு என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

மேலும் திருக்குர்ஆனின் ஒவ்வொரு பாகத்தையும் சமமான 8 பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் "ஸுமுன்' (எட்டில் ஒன்று) என்று குறிப்பிடுவது சமீப கால வழக்காகும்.

மன்ஜில்

முப்பது பாகங்களாகப் பிரிக்கப்பட்டது போல் ஏழு மன்ஜில்களாகவும் குர்ஆனைச் சிலர் பிரித்துள்ளனர்.

இதுவும் குர்ஆனின் ஓரங்களில் இன்றளவும் அச்சிடப்பட்டு வருகிறது. வாரத்திற்கு ஒரு முறை குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்க வேண்டும் என்பதற்காக சம அளவிலான ஏழு பாகங்களாகக் குர்ஆனைப் பிரித்தனர். இதுவே மன்ஜில் எனப்படுகிறது.

இதுவும் நம்முடைய வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட பிரிவு தானே தவிர, அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் பிரித்தது அல்ல. இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வரும் மூலப் பிரதியில் மன்ஜில் என்பது இல்லை.

வாரத்தில் ஒரு முறை குர்ஆனை ஓதி முடிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளதாக ஹதீஸ்கள் உள்ளன. ஆயினும் தினமும் இந்த அளவு தான் ஓத வேண்டும் என்பது அவரவர் தீர்மானம் செய்ய வேண்டியதே தவிர மற்றவர்கள் அதை அளவிட்டுக் கூறுவது ஏற்க முடியாதது. மேலும் குர்ஆன் அல்லாததை குர்ஆனில் எழுதி யிருப்பதும் ஏற்க முடியாததாகும்

0 comments for திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு 3

கருத்துரையிடுக

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505