திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு 2
எழுத்து வடிவிலும்...
கல்வியாளர் உள்ளங்களில் குர்ஆனைப் பாதுகாக்க ஏற்பாடு செய்ததுடன் நின்று விடாமல் அந்தச் சமுதாயத்தில் எழுதத் தெரிந்திருந்தவர்களை அழைத்து தமக்கு அவ்வப் போது வருகின்ற இறைச் செய்தியை உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிவு செய்வார்கள்.
இவ்வாறு பதிவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலீத் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸாபித் பின் கைஸ் (ரலி) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
இந்த எழுத்தர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லச் சொல்ல பேரீச்சை மரப்பட்டைகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும், பதனிடப்பட்ட தோல்களிலும், கால்நடைகளின் அகலமான எலும்புகளிலும் எழுதிக் கொள்வார்கள். அன்றைய சமுதாயம், இவற்றைத் தான் எழுதப்படும் பொருட்களாகப் பயன்படுத்தி வந்தது.
இவ்வாறு எழுதப்பட்டவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இது தவிர குர்ஆனை மனனம் செய்தவர்கள் தாமாகவும் எழுதி வைத்துக் கொண்டார்கள்.
இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அருளப்பட்ட முழுக் குர்ஆனும் நபித்தோழர்களுடைய உள்ளங்களிலும், எழுதப்பட்ட ஏடுகளிலும் பாதுகாக்கப்பட்டது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள்.
திருக்குர்ஆன் 98:2 வசனத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூய்மையான ஸுஹுஃபுகளை ஓதுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வேதம் பல வசனங்களில், கிதாப் என்று கூறப்படுவது போல் இவ்வசனத்தில் ஸுஹுஃபு என்று கூறப்பட்டுள்ளது.
தனித்தனி ஏடுகளாக இருக்கும் போது ஸுஹுஃபு என்றும், அந்த ஏடுகள் அனைத்தையும் ஒன்றாக வரிசைப்படுத்தித் தொகுக்கும் போது அது கிதாப் என்றும் சொல்லப்படும்.
நபிகள் நாயகம் காலம் வரை திருக்குர்ஆன் ஸுஹுஃபு என்ற தொகுக்கப்படாத ஏடுகள் வடிவத்தில் தான் இருந்தது.
நபிகள் நாயகம் காலத்தில் திருக்குர்ஆன் முழுமையாக எழுதப்பட்டிருந்தாலும் அனைத்து வசனங்களும் வரிசைப்படி அமைக்கப்பட்டிருந்தாலும், அத்தியாயங்களைப் பொறுத்த வரை ஒன்றன் பின் ஒன்றாக வரிசைப்படுத்தித் தொகுக்கப்படாமல் இருந்தது என்பதற்கு மேற்கண்ட 98:2 வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு வரிசைப்படுத்தித் தொகுக்கப்படும் என்று இறைவ னுக்குத் தெரியும். எனவே திருக்குர்ஆனை கிதாப் என்றும் இறைவன் குறிப்பிடுகின்றான்.
அபூபக்ர் (ரலி) ஆட்சியில்...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 12ஆம் ஆண்டு "யமாமா' என்ற ஒரு போர் நடந்தது.
முஸைலமா என்பவன் தானும் ஒரு இறைத் தூதன் என்று பிரகடனம் செய்து தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி இருந்தான். அவனுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடந்த இப்போரில் குர்ஆனை மனனம் செய்த சுமார் 70 நபித் தோழர்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து குர்ஆனை எழுத்து வடிவமாக ஒழுங்குபடுத்து மாறு வலியுறுத்தினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினார்கள்.
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத ஒரு பணியை நாம் ஏன் செய்ய வேண்டும்'' என்பதே அவர்களின் தயக்கத்திற்குக் காரணம். உமர் (ரலி) அவர்கள் தம் தரப்பில் உள்ள நியாயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்து இது செய்ய வேண்டிய பணி தான் என்று விளக்கிய பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். அப்போது குர்ஆனை மனனம் செய்தவர்களிலும், எழுதியவர்களிலும் தலைசிறந்த வராகவும், இளைஞராகவும் இருந்த ஸைத் பின் ஸாபித் அவர்களை அழைத்து வரச் செய்து இந்தப் பொறுப்பை அவரிடத்திலே அபூபக்ர் (ரலி) ஒப்படைத்தார்கள்.
அவரும் அந்தப் பொறுப்பை ஏற்று குர்ஆனை ஒழுங்குபடுத்துகின்ற பணியை மேற்கொண்டார். (நூல்: புகாரி 4988, 4989)
திருக்குர்ஆனின் வசனங்கள் அருளப்பட்டவுடன், "இந்த வசனங்களை இந்த வசனத்திற்கு முன்னால் எழுதுங்கள்; இந்த வசனங்களை இந்த வசனத்திற்குப் பின்னால் எழுதுங்கள்; இந்த வசனங்களை இந்தக் கருத்தைக் கூறும் அத்தியாயத்தில் வையுங்கள்'' என்று நபிகள் நாயகம் கட்டளையிடுவார்கள். அதன்படி நபித்தோழர்கள் எழுதிக் கொள்வார்கள். மனனம் செய்தும் கொள்வார்கள்.
(பார்க்க: திர்மிதீ 3011)
இன்று நாம் பயன்படுத்தும் குர்ஆனில் எந்த அத்தியாயத்தில், எந்த வரிசையில் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளதோ அது நபிகள் நாயகம் காட்டிய வழிமுறையில் தான் அமைந்துள்ளது.
வசனங்களின் வரிசை அமைப்பும், ஒரு அத்தியாயத்தில் இடம் பெற்ற வசனங்கள் எவை என்பதும் நபிகள் நாயகத்தின் கட்டளைப்படியே முடிவு செய்யப்பட்டது.
அப்படியானால் அபூபக்ருக்கு இதில் என்ன வேலை என்ற சந்தேகம் ஏற்படலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை எழுதச் சொல்லும் எல்லா நேரத்திலும் எல்லா எழுத்தர்களும் மதீனாவில் இருக்க மாட்டார்கள். சில வசனங்கள் அருளப்படும் போது வெளியூரில் இருந்தவர்கள் தமது ஏடுகளில் அந்த வசனங்களை எழுதியிருக்க மாட்டார்கள்.
இதனால் ஒவ்வொரு எழுத்தருடைய ஏடுகளிலும் ஏதேனும் சில வசனங்களோ, அத்தியாயங்களோ விடுபட்டிருக்க வாய்ப்பு இருந்தது.
ஒவ்வொரு எழுத்தரும், தம்மிடம் உள்ளது தான் முழுமையான குர்ஆன் என்று தவறாக எண்ணும் போது. குர்ஆனில் முரண்பாடு இருப்பது போல் தோன்றும்.
அனைத்து எழுத்தர்களின், அனைத்து ஏடுகளையும் ஒன்று திரட்டி, மனனம் செய்த அனைவர் முன்னிலையில் சரி பார்த்தால் ஒவ்வொருவரும் எந்தெந்த வசனங்களை அல்லது அத்தியா யங்களை எழுதாமல் விட்டுள்ளார் என்று கண்டறிய இயலும்.
இந்தப் பணியைத் தான் ஸைத் பின் ஸாபித் என்ற நபித்தோழர் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்கள் செய்து முடித்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டிலிருந்த ஏடுகளையும், குர்ஆன் எழுத்தர்களிடமிருந்த ஏடுகளையும் ஸைத் பின் ஸாபித் (ரலி) திரட்டினார்கள். மனனம் செய்தவர்களை அழைத்து அவர்கள் மனனம் செய்தவற்றையும் எழுத்து வடிவ மாக்கினார்கள்.
இவற்றைத் தொகுத்து, மனனம் செய்திருப்பவர்களுடைய மனனத்திற்கு ஏற்ப ஏடுகளை வரிசைப்படுத்தி னார்கள்.
பாதுகாக்கப்பட்ட இந்த மூலப் பிரதி அபூபக்ர் (ரலி) அவர்களுடைய பாதுகாப்பில் ஆவணமாக இருந்தது. அது மக்களைச் சென்றடையவில்லை. மனனம் செய்தவர்களெல்லாம் மரணம் அடைந்து விட்டாலும் அப்போது இந்த ஆவணத்தின் அடிப்படையில் குர்ஆனைத் தயாரித்து விட முடியும்.
அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு இந்த ஆவணம் உமர் (ரலி) அவர்களிடம் இருந்தது. உமர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அவரது மகளும், நபிகள் நாயகத்தின் மனைவியுமான ஹப்ஸா (ரலி) இடத்தில் இருந்தது.
உஸ்மான் (ரலி) ஆட்சியில்...
இந்தக் குர்ஆன் ஆவணம் பொது மக்களுக்குப் பரவலாக சென்றடையாத காரணத்தால் அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் எதைப் பற்றி அஞ்சினார்களோ அந்த விபரீத விளைவுகள் உஸ்மான் (ரலி) காலத்தில் ஏற்படும் அறிகுறிகள் தோன்றின.
மனனம் செய்த நபித்தோழர்கள் கணிசமாகக் குறைந்து, இஸ்லாமும் பல பகுதிகளுக்குப் பரவிவிட்ட நிலையில், அரை குறையாக மனனம் செய்தவர்கள் அதையே குர்ஆன் என்று அந்தந்த பகுதிகளிலே அறிமுகப்படுத்தும் நிலையும், அதுவே முழுமையான குர்ஆன் என்று கருதும் நிலையும் ஏற்பட்டது.
இதை அறிந்த உஸ்மான் (ரலி) அவர்கள் "இந்த ஆவணத்தைப் பொதுவுடைமை ஆக்க வேண்டும்; மக்களிடத்திலே கொண்டு செல்ல வேண்டும்; அவ்வாறு கொண்டு செல்வதன் மூலமாகத் தான் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்'' என்று கருதி குர்ஆனை ஒரு நூல் வடிவத்தில் அமைக்கும் பணியை மேற்கொண்டார்கள்.
அத்தியாயங்களை வரிசைப்படுத்துதல்
ஹப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்த அந்த ஒரே மூலப் பிரதியைப் பெற்று அதைப் போல் பல பிரதிகள் தயாரிக்கும் பணியை உஸ்மான் (ரலி) அவர்கள் செய்யலானார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தயாரித்த மூலப் பிரதியில் ஒவ்வொரு அத்தியாயமும் முழுமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், இது முதல் அத்தியாயம், இது இரண்டாவது அத்தியாயம் என்று அத்தியாயங்கள் வரிசைப்படுத்தப் படாமல் இருந்தன.
உதாரணமாக, பல பக்கங்களைக் கொண்ட தனித்தனியான ஐம்பது கட்டுரைகளை தனித்தனியாகச் சுருட்டி ஒரு பெட்டியில் போட்டு வைத்தால், எது முதலில் வர வேண்டும், எது இரண்டாவதாக வரவேண்டும் என்று அறிய முடியாது. ஆனால் அந்தக் கட்டுரைகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைத்தால் எது முதலாவது, எது இரண்டாவது என்ற வரிசை அமைப்பை அறிய முடியும்.
வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கும் இந்தப் பணியைத் தான் உஸ்மான் (ரலி) அவர்கள் செய்தார்கள். அத்தியாயங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இப்போது இருக்கும் வரிசைப்படி அமைத்தார்கள் என்ற கூற்று தவறாகும்.
ஆயிஷா (ரலி) அவர்களிடம் இராக் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து, "உங்கள் குர்ஆன் பிரதியை எனக்குக் காட்டுங்கள்'' என்றார். ஏன் என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். "குர்ஆன் அத்தியாயங்களை சரியான வரிசைப்படி அமைத்துக் கொள்வதற்காக'' என்று அவர் கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி), "எதை முன்னால் ஓதினாலும் அதனால் உனக்கு எந்தக் கேடும் இல்லை'' என்று குறிப்பிட்டார்கள்.
(நூல்: புகாரி 4993)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில், பகரா (எனும் 2வது) அத்தியாயத்தையும், பின்னர் நிஸா (எனும் 4வது) அத்தியாயத் தையும், பின்னர் ஆலு இம்ரான் (எனும் 3வது) அத்தியாயத்தையும் ஓதினார்கள்.
(நூல்: முஸ்லிம் 1291)
உஸ்மான் (ரலி) அவர்கள், தம்முடைய காலத்தில் இருந்த நபித் தோழர்களின் ஆலோசனைகளைப் பெற்று தமக்குத் தோன்றிய நியாயங்களின் அடிப்படையில் குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்படும் அத்தியாயம்; தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதப்படக் கூடிய அத்தியாயம் என்பதால் "அல்ஃபாத்திஹா' என்ற அத்தியாயத்தை முதல் அத்தியா யமாக அமைத்தார்கள். "இதை நீங்கள் முதல் அத்தியாயமாக வைக்க வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.
அதன் பிறகு குர்ஆனுடைய அளவை அடிப்படையாகக் கொண்டு பெரிய அத்தியாயத்தை முதலாவதாக வும், அதற்கடுத்த அளவிலான அத்தியாயத்தை அதற் கடுத்ததாகவும், அமைத்து குர்ஆனுடைய அத்தியாயங்களை உஸ்மான் (ரலி) வரிசைப்படுத்தினார்கள்.
சில இடங்களில் வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு சிறிய அத்தியாயங்களை முன்னாலும், பெரிய அத்தியாயங்களைப் பின்னாலும் வைத்தார்கள். இந்தக் காரணங்கள் நமக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் இதை உஸ்மான் (ரலி) அவர்கள் தான் வரிசைப்படுத்தி னார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஒரு ஒழுங்குக்குள் இருந்தால் தான் குழப்பம் ஏற்படாது என்பதற்காக உஸ்மான் (ரலி) செய்த அந்த ஏற்பாட்டை உலக முஸ்லிம் சமுதாயம் எந்தக் கருத்து வேறுபாடுமின்றி ஒப்புக் கொண்டு விட்டது.
இந்த வரிசைப்படுத்துதல் இறைவன் புறத்திலிருந்து சொல்லப்பட்டதல்ல. இறைத் தூதரின் வழி காட்டுதலின்படியும் அமைக்கப்பட்டது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அலீ (ரலி) அவர்கள் தம்மிடம் வைத்திருந்த பிரதியில் திருக்குர்ஆன் எந்த வரிசையில் அருளப்பட்டதோ அந்த வரிசையில் எழுதி வைத்திருந் தார்கள். முதல் அத்தியாயமாக 96வது அத்தியாயம் அவரது ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது. மக்காவில் அருளப்பட்ட அத்தியாயங்களை முதலில் எழுதிவிட்டு, பிறகு மதீனாவில் அருளப்பட்ட அத்தியாயங்களை அவர் எழுதி வைத்திருந்தார்.
அதே போல் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் முதல் அத்தியாயமாக "பகரா' அத்தியாயத்தை எழுதியிருந்தார்கள். அது குர்ஆனில் தற்போது இரண்டாவது அத்தியாயமாக இருக்கிறது. இப்பொழுதுள்ள வரிசைக்கும் அவரது வரிசைக்கும் இடையே இதுபோன்று ஏராளமான மாற்றங்கள் இருந்தன.
உபை இப்னு கஅப் என்ற நபித் தோழர் 5வது அத்தியாயமாக இருக்கும் அல்மாயிதாவை 7வது அத்தியாய மாகவும், 4வது அத்தியாயமான அந்நிஸா அத்தியாயத்தை 3வது அத்தியாயமாகவும், 3வது அத்தியாயமான ஆலு இம்ரான் அத்தியாயத்தை 4வது அத்தியாய மாகவும், 6வது அத்தியாயமான அல் அன்ஆம் அத்தியாயத்தை 5வது அத்தியாயமாகவும், 7வது அத்தியாயமான அல் அஃராஃப் அத்தியாயத்தை 6வது அத்தியாயமாகவும் எழுதி வைத்திருந்தார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தியாயங்களை வரிசைப்படுத்தியிருந்தால் பல நபித் தோழர்கள் பல வரிசைப் படி தங்களது ஏடுகளை அமைத் திருக்க மாட்டார்கள் என்பது உறுதி.
மற்றும் சிலர் அபூபக்ர் (ரலி) அவர்கள் தொகுத்த பிரதியில் அத்தியாயங்கள் வரிசைப்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். அதற்கும் ஆதாரம் இல்லை.
எனவே உஸ்மான் (ரலி) அவர்கள் தான் அத்தியாயங்களை வரிசைப்படுத்தினார்கள் என்று ஹாகிம் போன்ற அறிஞர்கள் கூறுவது தான் தக்க காரணங்களுடனும், போதுமான சான்றுகளுடனும் அமைந்துள்ளது