திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு 1
நபிகள் நாயகத்தின் உள்ளத்தில்...
திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு அருளப்பட்டது என்பதை முன்னுரையில் விளக்கியுள்ளோம். திருக்குர்ஆன் எவ்வாறு தொகுத்து பாதுகாக்கப்பட்டது என்பதை இனி காண்போம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது இதயத்தில் பதிவு செய்து கொள்வார்கள்.
இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கு மற்றவர்களைப் போல் அவர்களும் ஆரம்பக் கட்டத்தில் மிகுந்த சிரத்தை எடுக்கலானார்கள். அது தேவையில்லை என்று திருக்குர்ஆன் மூலமாகவே அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
(திருக்குர்ஆன் 75:16-19, 20:114)
"திரும்பத் திரும்ப ஓதி மனனம் செய்வதற்காக நீர் முயற்சிக்க வேண்டாம், அதை உமது உள்ளத்திலே ஒன்று சேர்ப்பது நமது பொறுப்பு'' என்று திருக்குர்ஆன் கூறியது.
இன்னொரு வசனத்தில் "உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம்; நீர் மறக்க மாட்டீர்'' (திருக்குர்ஆன் 87:6) எனவும் அல்லாஹ் உத்தரவாதம் அளித்தான்.
எனவே ஜிப்ரீல் என்ற வானவர் அதிகமான வசனங்களைக் கூறினாலும், கூறியவுடனே ஒலி நாடாவில் பதிவது போல் நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் அப்படியே அவை பதிவாகி விடும்.
இறைவன் தனது தூதராக அவர்களை நியமித்ததால் அவர்களுக்கு இந்தச் சிறப்பான தகுதியை வழங்கியிருந்தான். எனவே இறை வனிடமிருந்து வந்த செய்திகளில் எந்த ஒன்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறதியாக விட்டிருப்பார்கள் என்று கருதவே முடியாது.
திருக்குர்ஆன் நபிகள் நாயகத் தினுடைய உள்ளத்தில் இவ்வாறு பாதுகாக்கப்பட்டது.
நபித்தோழர்களின் உள்ளங்களில்...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் எந்தச் சமுதாயத்தைச் சந்தித்தார்களோ அந்தச் சமுதாயம் எழுத்தறிவில்லாத சமுதாயமாகவும், அதே நேரத்தில் மிகுந்த நினைவாற்றலுடைய சமுதாயமாகவும் இருந்தது.
பொதுவாக எழுத்தாற்றல் இல்லாதவர்களுக்கு அதிக அளவிலான நினைவாற்றல் இருப்பதை இன்றைக்கும் கூட நாம் காண்கிறோம். நினைவாற்றல் மூலமாக மட்டும் தான் நம்மால் எதையும் பாதுகாத்து வைக்க முடியும் என்ற நிர்பந்தத்தின் காரணமாக இத்தகையோரின் நினைவாற்றல் தூண்டப்பட்டு அதிகரிக்கும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற உண்மை.
எழுதவும், படிக்கவும் தெரியாத அந்தச் சமுதாய மக்களில் தம்மை ஏற்றுக் கொண்டவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அவ்வப்போது அருளப்பட்ட வசனங்களைக் கூறுவார்கள். கூறிய உடனேயே அம்மக்கள் மனனம் செய்து கொள்வார்கள்.
திருக்குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரு நாளிலோ, குறுகிய காலத்திலோ அருளப்பட்டிருந்தால் அதை அந்தச் சமுதாயத்திற்கு மனனம் செய்து கொள்ள இயலாமல் போயிருக்கலாம்.
23 ஆண்டுகளில் இந்தக் குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டிருப்பதால் மனனம் செய்வது மிகவும் எளிதாகவே இருந்திருக்கும். 23 ஆண்டுகளுக்கு எட்டாயிரத்திற்கும் அதிகமான நாட்கள் உள்ளன. சுமார் ஆறாயிரம் வசனங்கள் கொண்ட குர்ஆனை தினம் ஒரு வசனம் என்ற அளவில் மனனம் செய்தாலே எட்டாயிரம் நாட்களில் சர்வ சாதாரணமாக முழுக் குர்ஆனையும் மனனம் செய்து விட முடியும்.
மேலும் மனனம் செய்ததை மறந்து விடாமல் இருப்பதற்காக இஸ்லாத்தில் சிறப்பான ஒரு ஏற்பாட்டையும் நபிகள் நாயகம் (ஸல்) செய்தார்கள். "முஸ்லிம்கள் தினமும் நடத்துகின்ற ஐந்து நேரத் தொழுகைகளிலும், தாமாக விரும்பித் தொழுகின்ற தொழுகைகளிலும் திருக்குர்ஆனின் சில பகுதிகளையாவது ஓதியாக வேண்டும்'' என்பது தான் அந்த ஏற்பாடு.
திருக்குர்ஆனை மனனம் செய்த முஸ்லிம்கள் அதை மறந்து விடாமல் இருக்க இந்த ஏற்பாடு உதவியாக இருந்தது. மேலும் மனனம் செய்யாதவர்களும் தொழுகையில் ஓத வேண்டும் என்பதற்காக திருக்குர்ஆனை மனனம் செய்யும் நிலை ஏற்பட இது உதவியாக இருந்தது.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட வசனங்களைச் சிரத்தை எடுத்து மக்களிடத்திலே கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
எங்கெல்லாம் இஸ்லாத்தை ஏற்றவர்கள் இருந்தார்களோ அவர்களுக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுப் பதற்காக சில தோழர்களை அனுப்பி வைத்தார்கள். உள்ளங்களில் திருக் குர்ஆன் பாதுகாக்கப்படுவதற்கு இது மேலும் உறுதுணையாக அமைந்தது.
இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுபடுத்தி, முறைப்படுத்தி, வரிசைப்படுத்திச் செல்வார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த கடைசி வருடத்தில் ஜிப்ரீல் இரண்டு முறை வந்து இவ்வாறு தொகுத்து வழங்கியதாக நபி வழித் தொகுப்பு நூல்களில் ஆதாரப் பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(நூல்: புகாரி 6, 1902, 3220, 3554, 4998)
இவ்வாறாக திருக்குர்ஆன் மனிதர்களுடைய உள்ளங்களில் பாதுகாக் கப்பட்டது. ஏராளமான தோழர்கள் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள்.
குறிப்பாக,
அபூபக்ர் (ரலி)
உமர் (ரலி)
உஸ்மான் (ரலி)
அலீ (ரலி)
தல்ஹா (ரலி)
ஸஅது (ரலி)
இப்னு மஸ்வூத் (ரலி)
ஹுதைஃபா (ரலி)
ஸாலிம் (ரலி)
அபூஹுரைரா (ரலி)
இப்னு உமர் (ரலி)
இப்னு அப்பாஸ் (ரலி)
அம்ர் பின் ஆஸ் (ரலி)
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
முஆவியா (ரலி)
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
அப்துல்லாஹ் பின் ஸாஇப் (ரலி)
ஆயிஷா (ரலி)
ஹஃப்ஸா (ரலி)
உம்மு ஸலமா (ரலி)
உபை பின் கஅபு (ரலி)
முஆத் பின் ஜபல் (ரலி)
ஸைத் பின் தாபித் (ரலி)
அபூதர்தா (ரலி)
மஜ்மா பின் ஹாரிஸா (ரலி)
அனஸ் பின் மாலிக் (ரலி)
ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களில் பலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆனை மனனம் செய்து முடித்திருந்தார்கள். சிலர் நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு மனனம் செய்தார்கள்.
இவ்வாறு கல்வியாளர் உள்ளங்களில் குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாகக் குர்ஆனும் கூறுகிறது. (திருக்குர்ஆன் 29:49)