சூரியன் மேற்கில் உதித்தல்
நடக்க முடியாத விஷயத்தைக் குறித்து "சூரியன் மேற்கே உதித்தாலும் இது நடக்காது'' என்று கூறப்படுவதுண்டு. சூரியன் மேற்கே உதிப்பது சாதாரணமாக நடக்கக் கூடியதன்று என்றாலும் நடக்க முடியாத இதுவும் யுக முடிவு நாளின் நெருக்கத்தில் நடக்கவுள் ளது. உலகம் தோன்றியது முதல் கிழக்கில் உதித்து வரும் சூரியன் திடீரென மேற்கிலிருந்து உதிக்கும். இந்த நிலை ஏற்பட்ட பின் ஈமான் கொள்வதோ, பாவமன்னிப்புக் கேட்பதோ இறைவனால் ஏற்கப்படாது.
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு முன் கியாமத் நாள் ஏற்படாது. அதைக் கண்டவுடன் மக்கள் (இறைவனை) நம்புவார்கள். ஆயினும் அதற்கு முன்பே நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அந்த நம்பிக்கை, பயனளிக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),
நூல்: புகாரி 4635, 4636, 6506, 7121
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதைச் சாதாரணமான ஒன்றாகக் கருதி விடக் கூடாது. அதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும்.
பூமி சூரியனைச் சுற்றி வருவதால் இரவு பகல் ஏற்படுகிறது என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் இந்தப் பூமி சுழன்று கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். இத்தகைய பூமியில் கிழக்கே உதித்து வரும் சூரியன் மேற்கே உதிக்க வேண்டுமானால் பூமி தன் சுழற்சியை திடீரென நிறுத்தி உடனே எதிர்த்திசையில் சுழல வேண்டும். அப்போது தான் மேற்கில் சூரியன் உதிக்க முடியும்.
நாற்பது மைல் வேகத்தில் செல்லக் கூடிய ஒரு பேருந்து திடீரென நிறுத்தப்பட்டால் அதில் பயணம் செய்தவர்கள் தூக்கி எறியப்படுவதை நாம் அனுபவித்திருக்கிறோம். திடீரென நிறுத்தப்படுவது மட்டுமின்றி உடனேயே பின்புறமாக அதே வேகத்தில் இந்தப் பேருந்து செல்வதாக கற்பனை செய்து பாருங்கள்! இது இன்னும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
அப்படியானால் ஆயிரம் மைல் வேகத்தில் சுழலும் இந்தப் பூமி திடீரென நிறுத்தப்பட்டு எதிர்த் திசையில் அதே வேகத்தில் சுழன்றால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
நினைத்துப் பார்த்திராத விதத்தில் இந்தப் பூமி குலுங்கும். கட்டிடங் கள் தகர்ந்து விழும். மலைகளும் கூட பெயர்த்து எறியப்படும். இவ்வளவு பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.