dailyvideo


அதிசயப் பிராணி


யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அதிசயப் பிராணி ஒன்றை இறைவன் படைத்து மக்களிடையே அதை நடமாட விடுவான். அந்தப் பிராணியின் வடிவம் பற்றி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் விபரம் காணப்படாவிட்டாலும் அத்தகைய பிராணி ஒன்று யுக முடிவு நாளின் நெருக்கத்தில் தோன்றும் என்பதற்கு திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஆதாரங்கள் கிடைக்கின்றன.

அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.

(அல்குர்ஆன் 27:82)

இறை வசனங்களை மக்கள் நம்பாத மோசமான காலகட்டத்தில் அந்தப் பிராணி தோன்றும் எனவும், அது வானிலிருந்து இறக்கப்படாது எனவும், இந்தப் பூமியிலேயே தோன்றும் எனவும், தஜ்ஜால் போன்று முன்பே படைக்கப்பட்டு அந்தப் பிராணி மறைத்து வைக்கப்படவில்லை. இனி மேல் தான் அது தோன்றவிருக்கிறது எனவும் இந்த வசனத்திலிருந்து அறியலாம்.

எத்தனையோ பிராணிகள் உலகில் உள்ளன. அவற்றிலிருந்து இந்தப் பிராணி வித்தியாசப்படுகின்றது. எந்தப் பிராணியும், மனிதர்களுடன் பேசுவதில்லை. இந்த அதிசயப் பிராணியோ மக்களிடம் பேசக் கூடியதாகப் படைக்கப்படும் என்பதையும் இந்த வசனத்திலிருந்து நாம் அறியமுடியும்.

பத்து அடையாளங்களில் ஒன்றாக இந்த அதிசயப்பிராணியும் உள்ளது என்ற ஹதீஸை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதும், நண்பகல் நேரத்தில் அந்தப் பிராணி மக்களுக்குக் காட்சி தருவதும் ஆரம்ப அடையாளங்களாகும். இவ்விரண்டில் எது முதலில் தோன்றினாலும் அதைத் தொடர்ந்து அடுத்ததும் தோன்றிவிடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), நூல்: முஸ்லிம் 5234

இவற்றைத் தவிர அப்பிராணி பற்றி மேலதிகமாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் நாம் காண முடியவில்லை.

மனிதர்களின் கற்பனைக்கு எட்டக் கூடிய வடிவில் முன்பே மனிதர்கள் அறிந்து வைத்திருக்கின்ற ஏதேனும் மிருகத்தின் வடிவில் அப்பிராணியின் வடிவம் அமைந்திருக்குமென்றால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ நமக்குக் கூறியிருப்பார்கள். மனி தர்கள் இது வரை கண்டிராத ஒரு வடிவில் அது அமைந்திருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்க முடியும். அதன் வடிவம் தான் நமக்குக் கூறப்படவில்லையே தவிர அது வந்துவிட்டால் சட்டென்று கண்டு கொள்ளக்கூடிய முக்கியமான தன்மையை அல்லாஹ் கூறிவிட்டான்.

"மனிதர்களுடன் பேசக் கூடியதாக அப்பிராணி அமைந்திருக்கும்'' என்பதை விட எந்த அடையாளமும் தேவையில்லை. அப்படி ஒரு பிராணி தோன்றவிருக்கிறது என்று நம்புவதே நமக்குப் போதுமானதாகும் என்பதாலேயே அது பற்றி அதிக விபரம் நமக்குக் கூறப்படவில்லை.

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505