மூன்று பூகம்பங்கள்,பெரு நெருப்பு
மூன்று பூகம்பங்கள்
யுக முடிவு நாளின் நெருக்கத்தில் மிகப்பெரிய அளவில் பூகம்பங்களும் ஏற்படும். மனிதர்கள் உயிருடன் புதையுண்டு போவார்கள்.
(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162
உலகில் ஆங்காங்கே பூகம்பங்களும் ஏற்பட்டு வருகின்றன என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடக்கூடிய இந்தப் பூகம்பங்கள் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும்.
இம்மூன்று பூகம்பங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று தனி அடையாளங்களாகக் கூறியுள்ளார்கள். இம்மூன்றையும் சேர்த்து இது வரை ஒன்பது அடையாளங்களை நாம் விளக்கியுள்ளோம்.
பெரு நெருப்பு
எமன் நாட்டில் மிகப் பெரும் நெருப்பு ஏற்பட்டு அந்நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி மொத்த உலகையும் சூழ்ந்து கொள்ளும். யாராலும் அணைக்க முடியாத அந்நெருப்பு பரவ ஆரம்பித்ததும் மக்கள் தத்தமது ஊரைக் காலி செய்து விட்டு ஓட ஆரம்பிப்பார்கள். நெருப்பும் அவர்களை விரட்டிச் செல்லும். முடிவில் எந்த இடத்தில் அவர்கள் ஒன்று சேர்க்கப்படுவார்களோ அந்த இடத்தை அடைவார்கள்.
எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின் பால் விரட்டிச் செல்லும், அது வரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162
யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ஏற்படக்கூடிய பத்து அடையாளங்களையும் ஓரளவு நாம் அறிந்து கொண்டோம்.
இந்தப் பத்து அடையாளங்கள் ஏற்பட்டு, பாவமன்னிப்பின் வாசல் அடைபடுவதற்கு முன் நமது வாழ்வைச் சீராக்கிக் கொள்ள வல்ல இறைவன் துணை செய்வானாக