ஊடகவியலாளர்களைக் கண்டு நடுநடுங்கும் இஸ்ரேல்!
ரமல்லா: ஓஃபர் பிரதேசத்தில் உள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ வழக்குமன்றம் 26 வயதான சுஹைப் அல் அஸா எனும் இளைஞருக்கு நான்கு மாதச் சிறைத் தண்டனையும், 3000 செக்கல் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
சுஹைப் அல் அஸா, 'பெத்லஹேம்-2000' எனும் வானொலிச் சேவையில் பணியாற்றும் ஓர் இளம் ஊடகவியலாளர். பலஸ்தீன் இணையதளம் ஒன்றில் செய்தியாளராகவும் அவர் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2012 ஃபெப்ரவரி மாதம் 5ஆம் திகதி கிழக்கு பெத்லஹேமின் உபைதிய்யா பிரதேசத்தில் உள்ள அஸாவின் வீட்டை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை சுற்றிவளைத்துத் திடீர் தாக்குதல் நடாத்தியது.
தேடுதல் வேட்டை என்ற போர்வையில் அஸாவின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, அவர் பயன்படுத்திய கணனிகளைக் கைப்பற்றியதோடு, அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது.
அஸாவுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிர்வாகத்தின் தீர்ப்புக் குறித்துக் கருத்துரைத்த அவரது தந்தை அஸீஸ், "பலஸ்தீன் மக்கள் மீதும் ஊடகவியலாளர் மீதும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் மேற்கொள்ளும் தொடர்ச்சியான ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாகவே இதனை நான் பார்க்கின்றேன்" என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், "பலஸ்தீன் மக்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் தொடர்ந்து குரல் எழுப்பிவரும் சுயாதீன ஊடகங்கள் மீதும், அவற்றின் ஊடகவியலாளர்கள் மீதும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் கொண்டுள்ள மிகப் பெரும் அச்ச உணர்வையே இந்தத் தீர்ப்பு ஐயமின்றி உறுதிப்படுத்தியுள்ளது" என்று அஸீஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.