dailyvideo


அமல்கள்


மனிதர்களும் ஜின்களும் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் அல்லாஹ்வை வணங்கவேண்டும் என்பதற்காகத் தானே தவிர வேறில்லை!
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்: -

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(அல்குர்ஆன் 51:56)
அல்லாஹ்வை வணங்குவதற்காகவே நம்மைப் படைத்த இறைவன் அவனை நாம் எவ்வாறு வணங்க வேண்டும் என்பதையும் நமக்கு அவனது திருமறையின் மூலமும் அவனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலமாகவும் நமக்கு காட்டியிருக்கிறான். இந்த வழிகாட்டுதல்கள் இல்லாமல் வேறு ஒரு புதிய வழி முறையைப் பின்பற்றி நாம் அவனை வணங்குவோமேயானால் அல்லாஹ் அதனை ஏற்றுக்கொள்வதில்லை.
நாம் எந்த ஒரு அமலைச் செய்வதாக இருந்தாலும் மூன்று நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக மிக அவசியம்!. அவைகளாவன: -
1) ஈமான்: -
ஈமானோடு சம்பந்தப்படாத அமல்கள் எதையுமே ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அல்லாஹ்வுத்தஆலா தன்னுடைய திருமறையிலே கூறுகிறான்: -
அவர்கள் செய்து வந்த அமல்களைக் கவணித்து அவற்றைப் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவோம். (அல்குர்ஆன் 25:23)
எனவே ஒருவருடைய அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அவர் ஈமான் கொண்ட முஸ்லிமாக இருப்பது மிக மிக அவசியம்.
2) மனத்தூய்மை: -
நாம் எந்த ஒரு அமலை செய்வதாக இருந்தாலும் நன்மையை எதிர்பார்த்து இஹ்லாஸோடு செய்ய வேண்டும். அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: -
ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை அழையுங்கள். (அல்குர்ஆன் 7:29)
துரதிருஷ்டவசமாக சிலரை நாம் பார்க்கிறோம் அவர்கள், அமல்களின் மூலம் மக்களிடையே பிரபலமடைய விரும்புகின்றனர். மனத்தூய்மையற்ற அமல்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதுமட்டுமல்லாமல் அந்த அமல்களுக்கு மறுமையில் எவ்வித பலனும் கிடைப்பதில்லை.
3) நபி வழியைப் பின்பற்றுதல்: -
எந்தவொரு வணக்கமாக இருந்தாலும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழி முறையில் அவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: -
‘அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக; ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)துதான்; இன்னும் உங்கள் மீதுள்ள கடமையானது, உங்கள் மீது சுமத்தப்பட்ட (படி வழிபடுவ)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்; இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை. (அல்குர்ஆன் 24:54)
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன் 4:59)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
எவர் ஒருவர் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றைப் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது நிராகரிக்கப்படவேண்டியதாகும்.ஆதாரம் : முஸ்லிம்.
ஆனால் நம்மில் சிலர் தங்களின் வழிகாட்டிகளாக ஸூபியாக்களையும், மகான்கள் என சிலரையும் நேரடியாகவே குர்ஆனுக்கும் ஹதீஸூக்கும் முரண்படும் விஷயங்களிலும் கூட அவர்களைப் பின்பற்றுவதைப் பார்க்கின்றோம். தங்களுடைய ஷெய்ஹூமார்கள் ஏதாவதொன்றைக் கூறிவிட்டால் அதுவே சிலரிடம் இறைவாக்காக மாறிவிடுவதைப் பார்க்கிறோம். குறிப்பிட்ட விஷயம் தொடர்பாக தெளிவான குர்ஆன் வசனமோ அல்லது ஆதாரமுள்ள ஹதீஸோ முன் வைக்கப்படும் போது அவைகளைக் கண்டு கொள்வதே இல்லை.
தனி நபர் வழிபாட்டைத் தவிர்த்து அல்-குர்ஆனையும், ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களையும் பின்பற்றக்கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருளுமாறு வல்ல அல்லாஹ்வை எப்போதும் பிரார்த்திப்போமாக!

0 comments for அமல்கள்

கருத்துரையிடுக

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505