dailyvideo


ஊடாக செயல்பாடு



ஊடாக செயல்பாடு - அல் ஜஸீரா தலைவர்!

ஒரு வெகுஜன ஊடகம் எவ்வாறு செயல்படவேண்டும்?

மக்கள் பிரச்சினைகளில் அதன் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
சமூக விவகாரங்களில் அந்த ஊடகத்தின் பிரதிநிதிகள் எந்த வகையில் பங்காற்ற வேண்டும்?

அடக்குமுறை, அட்டூழியம், ஊழல், கலாச்சார சீரழிவு, இயற்கை பேரழிவுகள் போன்ற வெகுஜனங்களை நேரடியாக பாதிக்கும் விஷயங்களில் அந்த ஊடகத்தின் பங்களிப்பு என்ன?

இத்தகைய கேள்விகளுக்கான ஒற்றைச் சொல் பதில்:

அல் ஜஸீரா!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரிலிருந்து செயல்படும் இந்தத் தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பத்தில் அரபி மொழியில் மட்டுமே துவங்கப்பட்டது. ஆங்கில மொழிக்கும் தன் சேவையினை விரிவுபடுத்திய பின்னர், இன்று உலக அளவில் மிகப் பிரபலமாக பேசப்படும் ஊடகங்களின் பட்டியலில் முதலிடத்தை அல் ஜஸீரா பிடித்துள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம்!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க-நேட்டோ படைகளின் கூட்டு ஆக்ரமிப்பு நேரத்தில் மக்களிடையே மிகப் பரவலாகிப்போனஅல்ஜஸீரா, அதன் பின் ஈராக்கில் சதாம் ஹுஸைனுக்கு எதிராக, "பேரழிவு ஆயுதங்கள்" எனும் உலகமகாப் பொய்யான காரணம் உருவாக்கி அமெரிக்கா நடத்திய போரின் காட்சிகளையும் அப்போர் நேரங்களில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களைத் துணிச்சலோடு நேரடி காட்சிகளாக உலகத்தின் முன்னிலையில் திறந்து காட்டியதோடு ஓர் ஊடகம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான நடப்பு உதாரணமாக மாறியது!

அதன் உச்சமாக, மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகி வரும் மக்கள் புரட்சிகளில் அல் ஜஸீராவின் உயரிய பங்களிப்பைச் சுட்டிக்காட்டலாம். குறிப்பாக, துனீஷியாவில் சர்வாதிகாரி செய்ன் அல் ஆபிடீனுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியையும் எகிப்தில் ஹோஸ்னி முபாரக்குக்குஎதிராக, கெய்ரோவிலுள்ள சுதந்திர மைதானத்தில்(தஹ்ரீர் ஸ்கொயர்) திரண்டிருந்த மக்களின் அமைதியான புரட்சியையும் நேரடி காட்சிகளாக உலகின் முன்னிலையில் திறந்து காட்டிய அதன் செய்தியாளர்களின் அர்ப்பணிப்பு சேவைக்கு எதையும் ஈடாக்கிட முடியாது.

இத்தகைய போர், புரட்சி தருணங்களின்போது அல் ஜஸீரா குறுகிய காலத்திலேயே அதனுடைய பல செய்தியாளர்களை இழந்துள்ளது. துனீஷியாவில் அல் ஜஸீராவுக்கு முழு தடைவிதிக்கப்பட்டது. எகிப்து புரட்சியின்போது அல் ஜஸீரா செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்களின் உடமைகளும் ஹோஸ்னி முபாரக்கால் பறிமுதல் செய்யப்பட்டன. இருப்பினும் தஹ்ரீர் ஸ்கொயரில் மக்களின் எழுச்சியினை இடைவிடாது நேரடியாக அது துணிச்சலுடன் ஒளிபரப்பிக்கொண்டேயிருந்தது. மக்களின் அந்த அமைதிப் புரட்சி காட்சிகள் உலகின் கண்ணில் நேரடியாக காட்டப்படாமல் போயிருந்தால், ஒருவேளை ஹோஸ்னி முபாரக்கால் அங்கு மிகப்பெரிய இரத்த ஆறு ஓட்டப்பட்டு அப்புரட்சியே ஒடுக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு இருந்தது.

மக்களின் பொதுப்பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிகைகளின் உடல்களைக் காட்சிப்பொருளாக்கி எழுத்து விபச்சாரம் செய்து பிழைப்பு நடத்தும் தமிழக-இந்திய ஊடகங்களை மக்களின் பொதுப்பிரச்சனைகளில் மிகத் துணிச்சலுடன் தன்னை ஈடுபடுத்தும் அல் ஜஸீராவுடன் ஒப்பிட்டு நோக்கினோமேயானால் கவிழ்ந்த தலை நிமிராமலேயே இனியுள்ள காலம் முழுவதும் வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு இந்திய ஊடகங்கள் தங்களின் பொறுப்புணர்வு மறந்து, பத்திரிகை வியாபாரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுகின்றன. இதனால் கலாச்சார சீரழிவு, இளைய தலைமுறை ஆபாசத்தால் பாதிப்பு, சமூகத்தில் குற்றங்கள் பெருக துணை போதல், மூட நம்பிக்கைகள் அதிகரித்தல், மக்களின் வாழ்க்கை தரம் மென்மேலும் சீரழிதல் போன்ற படுபாதகமான விஷயங்கள் பொது மக்களிடையே அதிகரிப்பதற்குத் தாமும் காரணமாகிறோம் என்ற குற்ற உணர்வு சிறிதுகூட இத்தகைய வெட்கம் கெட்ட தமிழக-இந்திய ஊடகங்களுக்கு இருப்பதுபோல் தெரியவில்லை.

இத்தகைய நிலையிலுள்ள தமிழக-இந்திய ஊடகங்களுக்கு, தம் பொறுப்புணர்வை உணர்ந்து எப்படிச் செயல்பட வேண்டுமென அல் ஜஸீரா தொலைக்காட்சியின் தலைவரே ஒரு வகுப்பெடுத்தால் எப்படியிருக்கும்?

இதோ, அல் ஜஸீரா தொலைக்காட்சியின் தலைவர் வாதா கான்பர் தம்முடைய சில அனுபவங்களையும் அல் ஜஸீரா தொலைக்காட்சியின் செயல்பாட்டினையும் தொழில்நுட்ப வளர்ச்சியால் எழுச்சி கண்டுள்ள இளைஞர்கள் தலைமையில் அரபு நாடுகளில் நிகழ்ந்து வரும் மக்கள் புரட்சிக்கு மத்தியில் அல் ஜஸீரா தம் செயல்பாடுகளை எவ்வாறு அமைத்துக்கொள்கிறது, மக்களின் நியாயமான உணர்வுகளுக்கு வடிகாலாக அல் ஜஸீரா எப்படிச் செயல்படுகிறது போன்றவற்றைத் தமது சிறு உரையின் மூலம் அழகாக விவரிக்கிறார்.


இப்பேச்சில் அவர் ஒரு இடத்தில் குறிப்பிடும், "மக்களை ஏமாற்றும் திறமையைக்கூட இங்குள்ள ஊழல் பெருச்சாளிகள் இழந்துள்ளனர்" என்ற வாசகம் தமிழக-இந்திய அரசியல், சமூக சூழலுக்கும் மிகப் பொருந்தும்! ஆம், உண்மையில் "மக்களுக்கான நலத்திட்டங்களில் திறமை இழந்ததைப் போலவே, மக்களை ஏமாற்றும் திறமையைக்கூட இந்தியாவில் அதிகாரபீடங்களிலிருக்கும் ஊழல் பெருச்சாளிகள் இழந்து விட்டனர்". இனிமேலும் இத்தகைய அரசியல்வாதிகளை நம்ப மக்கள் தயாரில்லை. அவர்களுக்கு எதிராக இந்தியாவிலும் ஒரு மக்கள் எழுச்சி நடைபெறும்; நடைபெற வேண்டும்.



0 comments for ஊடாக செயல்பாடு

கருத்துரையிடுக

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505