தொழுகையின் அவசியம்
மனிதப்படைப்பின் நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதைத் தவிர வேறில்லை!
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
தொழுகை நேரங்குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது: -
நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. (அல்குர்ஆன் 4:103)
மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்
எல்லாத் தொழுகைகளையும் பேணித் தொழ வேண்டும்:-
எல்லாத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகைகளையும் பேணித் தொழுது கொள்ளுங்கள். தொழுகையின் போது அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சத்தோடு நில்லுங்கள். (அல்குர்ஆன் 2 : 238)
போர்களத்திலும் தொழுகையை நிலைநிறுத்த வேண்டும்: -
(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும். (அல்குர்ஆன் 4:102)
தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்லமுடியும்!
இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள். இத்தகையோர்தாம் (சுவர்க்கத்தை) அனந்தரம் கொள்பவர்கள், இவர்கள் எத்தகையோரென்றால் ஃபிர்தௌஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரமாக கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள். (அல்குர்ஆன் 23:9-11)
ஜமாத்அத்தோடு தொழவேண்டிய அவசியம்: -
நீங்கள் தொழுகையையும் நிலைநாட்டுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். மேலும் என் முன்னிலையில் (தலை சாய்த்து) ருகூஉ செய்பவர்களுடன் நீஙகளும் சேர்ந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2 : 43)
அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்:-
அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமான அமல் எது என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன், தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் – அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது; ஆதாரம் : புகாரி
2. தொழுகையின் பலன்கள் : -
தொழுகை பாவக்கறைகளைப் போக்குகின்றது: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
‘உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்’ என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி). ஆதரம்: ஸஹீஹுல் பூகாரி, பாகம் 1, அத்தியாயம் 9, எண் 528
தொழுகை தீய காரியங்களை அகற்றிவிடும்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
‘ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். ‘பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றிவிடும்’ (திருக்குர்ஆன் 11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் ‘இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?’ என்று கேட்டதற்கு ‘என் சமுதாயம் முழுமைக்கும்’ என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி), ஆதாரம்: ஸஹீஹுல் பூகாரி, பாகம் 1, அத்தியாயம் 9, எண் 526
மானக்கேடாவைகளைத் தடுக்கிறது: -
அல்லாஹ் கூறுகிறான்: -
(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும், அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (அல்குர்ஆன் 29:45)
உரிய நேரத்தில் உள்ளச்சத்துடன் தொழுபவரை மன்னிப்பது அல்லாஹ்வின் பொறுப்பு:-
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
‘ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் மக்கள் மீது கடமையாக்கியுள்ளான். எவர் சிறந்த முறையில் ஒளு செய்து, இத்தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறாரோ – இன்னும் எவருடைய உள்ளம் தொழுகையில் பணிந்திருக்கிறதோ அவரை மன்னிப்பது இறைவனின் பொறுப்பாகும். மேலும், எவர் இவ்வாறு தொழுகையைப் பேணிச் செயல்படவில்லையோ அவரை இறைவனின் மன்னித்தருளுதல் எனும் பொறுப்பான வாக்குறிதி சேராது. இறைவன் நாடினால் அவரை மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்.’ அறிவிப்பவர்: : உபாதா பின் ஸாமித் (ரலி), ஆதாரம்: அபூதாவூது
தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும்: -
‘எவர் தம் தொழுகைகளைச் சரியான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு – அவரது தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகைகளைப் பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது, ஆதாரமாகவும் ஆகாது, ஈடேற்றத்திற்கான சாதனமாகவும் . அறிவிப்பவர்:: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி), ஆதாரம்: முஸ்னத் அஹமத், இப்னுஹிப்பான்.
தொழுபவர்கள் மார்க்கத்தில் சகோதரர்கள்: -
ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சதோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம். (அல்குர்ஆன் 9:11)
3. தொழுகையை விடுவதனால் ஏற்படும் விளைவுகள்: -
தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு: -
அல்லாஹ் கூறுகிறான்: -
நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 30:31)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். ஆதாரம்: முஸ்லிம்.
முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி
தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. ஆதாரம்: திர்மிதி
தொழுகையை விடுவோர் நரகில் நுழைவார்: -
‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்குர்ஆன் 19:59)
தொழாதவர்கள் மறுமையில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவர்களோடு எழுப்பப்படுவான்: -
யார் தொழுகையைப் பேணித் (தொழுகின்றாரோ) அது அவருக்கு மறுமையில் ஒளியாகவும், அத்தாட்சியாகவும், பாதுகாக்கக் கூடியதாகவும் ஆகிவிடும். யார் அதை பாதுகாத்துத் தொழ வில்லையோ, அது அவருக்கு ஒளியாகவோ, அத்தாட்சியாகவோ, பாதுகாப்பாகவோ இருக்காது. இன்னும் அவன் மறுமையில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவர்களோடு எழுப்பப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், தப்ரானி)
சடைந்தவர்களாக தொழுவோரின் தான தர்மங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது: -
அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில், அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை. (அல்குர்ஆன் 9:54)
ஜமாஅத்தாக தொழ வராதோரின் வீடுகளை நபி (ஸல்) அவர்கள் தீயிலிட்டுக் கொளுத்த விரும்பினார்கள்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
ஜமாஅத்தாகத் தொழுவது தனித்துத் தொழுவதையும் விட இருபத்தி ஏழு மடங்கு சிறப்பிற்குரியதாகும். நான் தொழுகைக்கு ஏவி, தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக யாரையேனும் நியமித்து விட்டு ஜமாஅத்துத் தொழுகைக்கு வராதோரின் இல்லங்களுக்கு நானே சென்று அவர்கள் அங்கிருக்கும் நிலையில் அவ்வில்லங்களுக்குத் தீ வைக்க விழைகின்றேன். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
தொழுகையின் அழைப்பை விளையாட்டாக எடுத்துக்கொள்பவர் அறிவில்லாத மக்கள்: -
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், – அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்; இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம். (அல்குர்ஆன் 5:58)
எனதருமை சகோதர சகோதரிகளே, அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்ட தொழுகையை விடுவதன் விளைவுகளைப் பற்றி நாம் சிந்திக்க கடமைப்பட்டடுள்ளோம். ஷைத்தானின் சோம்பல் என்னும் வலையில் சிக்க விடாமல் அல்லாஹ் என்னையும், உங்களையும் மற்றும் முஸ்லிமான நம் அனைவரையும் பாதுகாத்து தொழுகையை முறைப்படி தொழுவோரின் கூட்டத்தாருடன் சேர்த்துவைத்து நம்மை சுவனபதியில் சேர்த்தருள்வானாகவும்.