ஸூரத்துல் முனாஃபிஃகூன் Al-Munafiqun
ஸூரத்துல் முனாஃபிஃகூன் (நயவஞ்சகர்கள்)
மதனீ, வசனங்கள்: 11
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
மதனீ, வசனங்கள்: 11
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
63:1 إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ ۗ وَاللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَاذِبُونَ
63:1. “(நபியே!) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, “நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர்” என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்” என்று கூறுகின்றனர். மேலும், அல்லாஹ், “நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்” என்பதை நன்கு அறிவான். ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்” என்பதாகச் சாட்சி சொல்கிறான்.
63:2 اتَّخَذُوا أَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ ۚ إِنَّهُمْ سَاءَ مَا كَانُوا يَعْمَلُونَ
63:2. இவர்கள் தங்களுடைய (பொய்ச்)சத்தியங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தும் வருகின்றனர்; நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது.
63:3 ذَٰلِكَ بِأَنَّهُمْ آمَنُوا ثُمَّ كَفَرُوا فَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُونَ
63:3. இது நிச்சயமாக இவர்கள் ஈமான் கொண்டு பின் காஃபிர் ஆகி விட்டதனாலேயாகும்; ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது; எனவே, அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
63:4 وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ ۖ وَإِن يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ ۖ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ ۖ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ ۚ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ ۚ قَاتَلَهُمُ اللَّهُ ۖ أَنَّىٰ يُؤْفَكُونَ
63:4. இவர்களை நீர் பார்த்தால், இவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும்; அன்றியும் இவர்கள் பேசினால், இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்துக்) கேட்பீர்; எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர்; சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர்; ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள்; இவர்கள்தாம் (உம்) பகைவர்கள்; ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக; அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான்; இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்?
63:5 وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُم مُّسْتَكْبِرُونَ
63:5. இன்னும், “வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (இறைவனிடம்) பாவமன்னிப்புத் தேடுவார் என்று இவர்களிடம் கூறப்பட்டால், இவர்கள் தங்கள் தலைகளைச் சாய்த்துக் கொண்டு, பெருமை கொண்டவர்களாகத் திருப்பிச் செல்வதை நீர் காண்பீர்.
63:6 سَوَاءٌ عَلَيْهِمْ أَسْتَغْفَرْتَ لَهُمْ أَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ لَن يَغْفِرَ اللَّهُ لَهُمْ ۚ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
63:6. அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் அவர்களுக்குச் சமமேயாகும்; அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்பளிக்க மாட்டான் - பாவம் செய்யும் சமூகத்தாரை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
63:7 هُمُ الَّذِينَ يَقُولُونَ لَا تُنفِقُوا عَلَىٰ مَنْ عِندَ رَسُولِ اللَّهِ حَتَّىٰ يَنفَضُّوا ۗ وَلِلَّهِ خَزَائِنُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَٰكِنَّ الْمُنَافِقِينَ لَا يَفْقَهُونَ
63:7. இவர்கள் தாம், அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்கள்; (அவரை விட்டுப்) பிரிந்து செல்லும் வரை அவர்களுக்காக நீங்கள் செலவு செய்யாதீர்கள்” என்று கூறியவர்கள்; வானங்களிலும், பூமியிலுமுள்ள பொக்கிஷங்கள் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை; ஆனால் இந்நயவஞ்சகர்கள் (அதை) உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
63:8 يَقُولُونَ لَئِن رَّجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الْأَعَزُّ مِنْهَا الْأَذَلَّ ۚ وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ وَلَٰكِنَّ الْمُنَافِقِينَ لَا يَعْلَمُونَ
63:8. “நாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள்.
63:9 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ
63:9. ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.
63:10 وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ
63:10. உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.
63:11 وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا ۚ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
63:11. ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்.