ஈஸா நபியின் வருகை
தஜ்ஜாலின் கொடுமை தலை விரித்தாடும் போது ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகுக்கு இறங்கி வருவார்கள் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும்.
ஈஸா நபி வருவார்கள் என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரானது என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வாதிடுகின்றனர். தமது வாதத்தை நிலை நாட்ட சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றனர்.
எனவே அது பற்றி விரிவாக அறிந்து கொள்ளும் கடமை நமக்கு உள்ளது. அதை இங்கே விளக்கினால் கியாமத் நாளின் அடை யாளங்கள் என்ற தலைப்பை விட்டு விலகிச் செல்வதாகத் தோன்றும்.
எனவே ஈஸா நபி மரணித்து விட்டார்களா? என்ற தலைப்பில் தனியாக ஒரு ஆய்வுக் கட்டுரை நூலின் இறுதியில் சேர்த்துள்ளோம். அக்கட்டுரை இது குறித்த அனைத்து சந்தேகங்களையும் நீக்கும். இன்ஷா அல்லாஹ்.
தஜ்ஜால் இவ்வாறு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் போது ஈஸா நபியவர்கள் வருவார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்.
இவ்வாறு இருக்கும் போது மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை அல்லாஹ் அனுப்புவான். அவர்கள் குங்குமச் சாயம் தோய்க்கப்பட்ட இரண்டு ஆடைகள் அணிந்து தமது இரு கைகளையும் இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது வைத்தவர்களாக டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரின் கிழக்கே உள்ள வெள்ளை மினராவின் அருகே இறங்குவார்கள். அவர்கள் தலையைக் குனிந்தால் நீர் சொட்டும்! தலையை உயர்த்தினால் முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் உதிரும். அப்போது அவர்களின் பெருமூச்சு இறை மறுப்பாளர் மீது பட்டால் அவர் மரணிக்காமல் இருக்க மாட்டார். அவர்களின் பார்வை எட்டும் தொலைவுக்கு அவர்களின் பெருமூச்சு செல்லும். அவர்கள் தஜ்ஜாலைத் தேடுவார்கள். (பைத்துல் முகத்தஸ் அருகில் உள்ள) லுத் என்ற கிராமத்தின் வாசலில் அவனைக் கொல்வார்கள்.
நூல் : முஸ்லிம் 5228
மர்யமுடைய மகன் நீதியான தீர்ப்பளிப்பவராக இறங்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர் சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 2476, 3448, 3449
ஈஸா நபி இறங்கும் போது ஒட்டகங்கள் சவாரி செய்யப்படாமல் விடப்படும். பொறாமையும், கள்ளமும், கபடமும் இல்லாது ஒழியும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 221
ஈஸா நபி நபியாக வர மாட்டார்
ஈஸா நபியவர்கள் இறுதிக் காலத்தில் வரும் போது இறைத் தூதராக வர மாட்டார்கள். புதிய மார்க்கம் எதையும் கொண்டு வர மாட்டார்கள்.
உங்கள் இமாம் உங்களைச் சேர்ந்தவராக இருக்கும் போது ஈஸா நபியவர்கள் இறங்குவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : புகாரி 3449
ஈஸா நபியவர்கள் இறங்கும் போது அப்போதைய முஸ்லிம்களின் தலைவர் 'வாருங்கள்! எங்களுக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று ஈஸா நபியிடம் கேட்பார். அதற்கு ஈஸா நபியவர்கள் 'உங்களைச் சேர்ந்த ஒருவர் தான் உங்களுக்குத் தலைவராக இருக்க முடியும். இது இந்தச் சமுதாயத்துக்கு இறைவன் அளித்த கண்ணியமாகும்'' என்று ஈஸா நபி கூறி விடுவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 225
தஜ்ஜாலைக் கொல்வார்கள்
ரோமானியர்கள் (அதாவது கிறித்தவ சக்திகள்) அஃமாக் அல்லது தாபிக் என்ற இடத்தில் பாளையம் இறங்குவார்கள். அவர்களை எதிர் கொள்வதற்காக அன்றைய உலகில் மிகச் சிறந்தவர்களைக் கொண்ட படை ஒன்று மதீனாவிலிருந்து புறப்படும். போருக்காக அணிவகுத்த பின் 'எங்களைச் சேர்ந்தவர்களைச் சிறைப்பிடித்தவர் களுடன் நாங்கள் போரிட வேண்டும். நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்'' என்று ரோமானியர்கள் கேட்பார்கள். அதற்கு முஸ்லிம்கள் 'எங்கள் சகோதரர்களைத் தாக்க நாங்கள் இடம் தர மாட்டோம்'' என்று கூறி அவர்களுடன் போர் புரிவார்கள். முஸ்லிம்களின் படையில் மூன்றில் ஒரு பகுதியினர் பின் வாங்கி விடுவார்கள். அவர்களை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். அல்லாஹ்விடத்தில் அவர்கள் தாம் சிறந்த ஷஹீத்கள் ஆவர். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினர் வெற்றி பெறு வார்கள். அவர்கள் கான்ஸ்டான்டி நோபிலை வெற்றி கொள்வார்கள். தமது வாள்களை ஒலிவ மரத்தில் தொங்க விட்டு போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருப்பார்கள். அப்போது மஸீஹ் (ஈஸா நபி) வந்து விட்டார் என்று ஷைத்தான் பரப்புவான். உடனே அவர்கள் புறப்படுவார்கள். ஆனால் அது பொய்யாகும்.
அவர்கள் சிரியாவுக்கு வந்து போருக்காக படை அணிகளைச் சரி செய்து கொண்டிருக்கும் போது மர்யமின் மகன் ஈஸா இறங்குவார்கள். அவர்களுக்குத் தளபதியாக ஆவார்கள். அல்லாஹ்வின் எதிரி (தஜ்ஜால்) அவர்களைக் காணும் போது தண்ணீரில் உப்பு கரைவது போல் கரைந்து விடுவான். அப்படியே அவர்கள் அவனை விட்டு விட்டால் அவன் அழிந்து விடுவான். ஆனாலும் ஈஸா நபியவர்கள் அவனைத் தமது கையால் கொல்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 5157
தஜ்ஜாலைக் கண்டவுடன் மக்கள் மலைகளை நோக்கி ஓட்டம் பிடிப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அல்லாஹ் வின் தூதரே! அந்நாளில் அரபுகள் எங்கே? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அரபுகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்கள்'' என விடையளித்தார்கள்.
நூல் : முஸ்லிம் 5238
தஜ்ஜாலைக் கொன்ற பின் தஜ்ஜாலிடமிருந்து தப்பித்த கூட்டத்தினர் ஈஸா நபியிடம் வருவார்கள். அவர்களின் முகத்தைத் தடவிக் கொடுப்பார்கள். சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் பதவிகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறுவார்கள்.
நூல் : முஸ்லிம் 5228
தஜ்ஜாலை ஈஸா நபி கொன்ற பின்னர் ஏழு ஆண்டுகள் எந்த இருவருக்கிடையிலும் எந்தப் பகையும் இல்லாத நிலை ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 5233
இந்த நிலையில் 'யாராலும் வெல்ல முடியாத அடியார்களை நான் வெளிப்படுத்தியுள்ளேன். அவர்களைத் தூர் மலையின் பால் அழைத்துச் செல்வீராக'' என்று ஈஸா நபிக்கு அல்லாஹ் செய்தி அனுப்புவான்.
நூல் : முஸ்லிம் 5228